கூடலூர்: லோயர்கேம்ப் இடையே அமைந்துள்ள தம்மணம்பட்டியில் 1989 ல் உமா ஆனந்த் நாத் சுவாமிகள் மூலம், பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கு வதற்காக குடிசை அமைக்கப்பட்டது. அதன்பின், பக்தர்கள் வருகை அதிகரித்ததால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் நன்கொடை மூலம் அங்கு சபரிமலை அடிவார ஐயப்பன்’ கோயில் கட்டப்பட்டது. 2003ல் சபரிமலை கண்டாறு ராஜீவ் தந்திரியால் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலைப் போன்றே 18 படிகள் , பின்வாசல் என அமைக்கப் பட்டது. கார்த்திகை 1 முதல் தை 5 ம் தேதி வரை முழுவதும் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்களும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
சபரிமலையில் மகரஜோதி விழா நடக்கும் போது, இக்கோயிலிலும் படிபூஜை நடத்தப்படும். பாதயாத்திரை பக்தர்களுக்காக இங்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதியும் உள்ளது.
கோயில் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் கூறும்போது, “சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக துவக்கப்பட்ட இக்கோயிலில், சீசன் நேரங்களில் தொடர்ந்து அன்னதானம் நடந்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் இங்கு தரிசனம் செய்து விட்டு செல்வர். நினைத்தது நடக்கும். திருமணத்தடை, குழந்தையின்மை ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்க சுவாமியை வணங்கிய பல பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளன,” என்றார். மேலும் விபரங்களுக்கு: 95973 96596.