பதிவு செய்த நாள்
23
நவ
2019 
12:11
 
 ராமநாதபுரம்: கோயில்களில் உள்ள கோபுரம், விமானத்தின் கட்டுமான கலைகள் குறித்து  திருப்புல்லாணி சுரேஷ் சுதா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு  மாணவி டோனிகா 13, கற்றுத்தேர்ந்து தனது அபார திறமையால் அசத்தி வருகிறார்.
திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயராஜ்,  வளர்மதி தம்பதியரின் மூத்த மகள். இவர் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தில்  சேர்ந்து பொறுப் பாசிரியர் ராஜகுரு மூலம் கோயில் கட்டுமான கலைகள் குறித்து  கற்றறிந்தார்.
இனி டோனிகா கூறுவார்....
கோயில்களில் நுழைவு வாயில் பகுதியில் இருப்பவை கோபுரம். கருவறைக்கு மேல்  உள்ள அமைப்பு விமானம். கோயில் விமானங்கள் 6 நிலைகளில் காணப்படும்.  அதிஷ்டானம், பாத சுவர், பிரஸ்தம், கிரீவம், சிகரம் போன்ற அமைப்புகள் இருக்கும்.  விமானத்தின் உயரத்தை கூட்ட உபபீடம் அமைப்பை ஏற்படுத்துவார்கள்.  அதிஸ்டானத்தில் உபானம், ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை, பத்மம், கம்பு போன்ற  அமைப்புக்களை உருவாக்கியிருப்பார்கள். 
பாதசுவரில் சோஷ்டம், பஞ்சரம், விரு த்தஸ்புடிதம், அரைத்தூண்கள் அமைப்பு இருக்கும். பிரஸ்தத்தில் கர்ணக்கூடு, பஞ்சரம்,  சாலை இவைகள் அனைத்தும் ஹாரம் என்றழைக்கப் படும். கிரீவத்தில் சிவன் கோயி ல்களில் நந்தியின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பெருமாள் கோயில்களில் கருடனின் சிற்பங்கள் இருக்கும். இதனை வைத்து சிவ, வைணவ ஸ்தலங்கள் என்பதை  அறியலாம். சிகரத்தில் அலுங்கு, மானாசி, போதிகை போன்றவை அமைக்கப்பட்டிருக்கும்.
விமானங்களில் கோபுரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் அமைப்புகளை வைத்து அந்த  கோயில் யார் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியும். போதிகையில் மெட்டு,  மொட்டு, வெட்டு, தரங்கம் போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. சோழர்கள் கால 
கோயில்களில் வெட்டு அமைப்பு இருக்கும். பிற்கால பாண்டியர்கள் கால கோயிலில்  மொட்டு அமைப்பு இருக்கும், என்றார்.