ஹஜ்ஜாஜ் என்னும் கொடியவன் ஒருவன் ஒருபகுதியின் நிர்வாகியாக இருந்தான். அவன் ஒரு மாளிகையை கட்டினான். ஆஹா! இதுபோல மாளிகையை வாழ்நாளில் நாங்கள் கண்டதில்லை என பலர் புகழாரம் சூட்டினர். அதைக் கேட்டு ஹஜ்ஜாஜ் சந்தோஷம் அடைவான். அப்பகுதியில் காஜா ஹஜன் என்னும் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார். அவர் மீது மக்கள் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தனர். தான் கட்டிய மாளிகை குறித்து அந்த பெரியவர் என்ன சொல்கிறார் என அறிய விரும்பினான் ஹஜ்ஜாஜ். ஒரு நாள் அவரை மாளிகைக்கு வரவழைத்தான். தன்னை பாராட்டுவார் என எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால் அவரோ, எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால், நீ அப்படி எண்ணாமல் இறுமாப்பு கொண்டிருக்கிறாய்.
இந்த மாளிகை ஒருநாள் தகர்ந்து போகலாம். மறுமை நாள் வரை இது நிற்காது. அந்த பணத்தை மக்களுக்கான பணிகள் செய்திருக்கலாம். நீ மண்ணறையில் மாளிகை கட்டுவதற்கு பதிலாக மாளிகையில் மண்ணறையை தோண்டிக் கொண்டாய். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றார். கொதித்து எழுந்த அவன் வாளை உருவினான். காவலர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். ஆனால் பெரியவர் சற்றும் கலங்கவில்லை. ஹஜ்ஜாஜ்! கோபம் வேண்டாம். உன் நன்மைக்காகவே அறிவுரை சொன்னேன். உன்னைப் புகழ்ந்தவர்கள் உன் ஆணவத்தை வளர்த்தார்கள். அதனால் தான் நான் அறிவுரை சொன்னால் கசப்பாக இருக்கிறது. ஒருவேளை என்னை கொலை செய்தால் கூட நான் பயப்பட மாட்டேன். இறைவனின் அருள் ஒன்றே எனக்கு போதுமானது என்றார். இது கேட்ட ஹஜ்ஜாஜ் ஒருகணம் சிந்தித்தான். உருவிய வாளை உறையில் இட்டான். பெரியவரே! என்னை நரகத்தில் இருந்து காப்பாற்றினீர். நான் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறேன் என்றான்.