பழநி: பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிச.4ல் சாயரட்சை பூஜையுடன் துவங்கியது. திருக்கார்த்திகை திருநாளான நேற்று அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் பூஜைகள் துவங்கின. மாலை 4:45 மணிக்கு சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். மலைக்கோயிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டன. 6:00 மணிக்கு தீபஸ்தம்பத்தில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருவிழாவில் அமைச்சர் செல்லுார் ராஜீ குடும்பத்துடன் பங்கேற்றார். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி தலைமையிலான அதிகாரிகள் செய்தனர். திருஆவினன்குடி மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில்களிலும் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
சின்னாளபட்டி:திருக்கார்த்திகையை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, வள்ளி, தெய்வானை சமேத மூலவர், சதுர்முக முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நாகாபரண அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் 1008 தீபங்களை ஏற்றி வழிபட்டனர். கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், மல்லீஸ்வரர் கோயிலிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தாண்டிக்குடி: பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. முன்னதாக விளக்குப் பூஜையும், மாலையில் சொக்கப்பன் கொளுத்தும் நிகழ்வு நடந்தது. மலைக்கோயிலில் தேரோட்டம் நடந்தது.