பதிவு செய்த நாள்
17
டிச
2019
03:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், நள்ளிரவில் ஜன்னல் கம்பியை அறத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கோவிலூர், கீழையூரில், அட்டவீரட்டானங்களில் ஒன்றான வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று வழக்கம்போல் இரவு 9:00 மணிக்கு அர்த்தசாம பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டது. 9:15 மணிக்கு கோவில் சிப்பந்தி சண்முகம், கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கதவுகளை சாத்தி, பூட்டி சாவியை சிவாச்சாரியார்களிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார். அதிகாலை மார்கழி மாதபிறப்பு என்பதால் சிறப்பு வழிபாடு நடத்த அதிகாலை 4:30 மணிக்கு கோவிலை திறக்க சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் சிப்பந்தி சண்முகம் சென்றனர். கோவில் இரண்டாம் பிரகார கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சூரியநாராயணன், போலீசார் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வடக்குப் புறமாக தென்பெண்ணை ஆற்றின் பக்கம் உள்ள தீர்த்தவாரி மண்டப கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பெரியானைக் கணபதி சன்னதி அருகே உள்ள இரும்பு ஜன்னலை மின்சாதன கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே நுழைந்துள்ளனர். கோவிலுக்குள் இருந்த நான்கு உண்டியல்களில் பூட்டை உடைத்து சில்லறை காசுகளை தவிர்த்து ரூபாய் நோட்டுகளை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என அறநிலையத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது.
தகவலறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 3 மர்ம நபர்கள் இரவு 11:30 மணி அளவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் தடயவியல் ஆய்வாளர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் இங்கு தான் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு இரவு காவலர் உள்ளார். பாதுகாப்பு மிக்க பழமையான ஒரு கோயில் வளாகத்தில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.