பதிவு செய்த நாள்
17
டிச
2019
03:12
சென்னை : மார்கழி மாதத்தை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவில் மாடவீதிகளில், திருவெம்பாவை பாடிய படி பஜனை கோஷ்டி வலம் வருகிறது.
இதில், பக்தர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம், தேவர்களின் மாதம் என குறிப்பிடப்படுகிறது. இறை வழிபாட்டிற்கு இம்மாதத்தை ஒதுக்குவதால், எந்த வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.மேலும், மார்கழி மாதத்தின் பனிப்பொழிவு, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்தே, நம் முன்னோர் ஆன்மிகத்துடன் இணைந்த நிகழ்ச்சிகளை, பல நுாற்றாண்டுகளாக கடைப்பிடித்து வந்துள்ளனர். மார்கழி மாத அதிகாலையில், பெண்கள் கோலம் போடுவதும்; வீதிவீதியாக பஜனை பாடுவதும், நாகரிக உலகில், மெல்ல மறைந்து வருகிறது.இந்நிலையில், அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், வடபழநி ஆண்டவர் கோவிலில், பஜனை கோஷ்டி வலம் வருகிறது. மார்கழி மாதம் முழுதும் அதிகாலை, 5:30 மணிக்கு, திருவெம்பாவை பாடியபடி, கோவில் மாட வீதிகளை வலம் வரும் பஜனை கோஷ்டியுடன், பக்தர்களும் பங்கேற்கலாம் என, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.