பதிவு செய்த நாள்
18
டிச
2019
02:12
வீரபாண்டி: மார்கழி பெருவிழா தொடர் சொற்பொழிவு தொடங்கியது. ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், கம்பன் கழகம் சார்பில், அங்குள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில், மார்கழி பெருவிழா தொடர் சொற்பொழிவு, நேற்று 17ல் தொடங்கியது.
பேராசிரியை நாஞ்சில் முத்துலட்சுமி உள்ளிட்டோர், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத் தனர். ஜன., 14 வரை நடக்கவுள்ள நிலையில், முதல் நாளில், ’இலக்கியம் காட்டும் இல்லறம்’ தலைப்பில், நாஞ்சில் முத்துலட்சுமி பேசியதாவது: அன்றைய காலத்தில், மார்கழி மாதத்தில், அனைத்து வீடுகளிலும் பெரிய கோலம் போடுவர்.
தங்கள் வீட்டின் திருமண வயதில், ஆண், பெண் பிள்ளைகள் உள்ளவர் மட்டுமே, கோலம் நடுவே சாணி பிடித்து, அதில் பூசணிப்பூவை சொருகிவைப்பர். இதை பார்ப்பவர், தை மாதத்தில், பெண், மாப்பிள்ளை கேட்டு வர, சங்கேத மொழியாக பயன்படுத்தினர். அந்த காலத்தில், தம்பதி இடையே சண்டை வந்தால், மனைவி, தன் பெற்றோருக்கு கடிதம் எழுதி புகார் தெரிவிப்பாள். கடிதம் ஊர் போய் சேர்ந்து, அவர்கள் வருவதற்குள், இவர்கள் சமாதானம் ஆகிவிடுவர். இன்று, மொபைல் போன் வரவால், தம்பதி சண்டையை, அனைவருக்கும் நேரடி ஒளிபரப்பு செய்யும் அளவு, சகிப்பு தன்மை குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை, வெவ்வேறு தலைப்புகளில், பலர் சொற்பொழிவாற்றவுள்ளனர்.
* திருவிளக்கு பூஜை: சேலம், சேவாபாரதி மகளிர் குழு சார்பில், 17ம் ஆண்டாக, அம்மா பேட்டை காளியம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி, திருவிளக்கு பூஜை, நேற்று 17ம் தேதி நடந்தது. அதில், 108 பெண்கள், காளியம்மனின், 1,008 நாமங்களை கூறி பூஜை செய்தனர். அதில், பெண்களுக்கு வளையல், ரவிக்கை துணி, மஞ்சள், குங்கும பூஜை பொருட்கள் இலவச மாக வழங்கப்பட்டன. அத்துடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பாவை பாடியபடி...: வாழப்பாடி அருகே, பேளூர், வசிஷ்டநதிக்கரையில், பஞ்சபூத சிவத் தலங்களில் முதல் தலமாக தான்தோன்றீஸ்வரர் கோவில், மறுகரையில், பழமையான வைணவ பெருமாள் கோவில் உள்ளது. நேற்று 17ம் தேதி, மார்கழி பிறப்பையொட்டி, அதி காலையில் எழுந்த சிறுவர் - சிறுமியர், பெருமாள் கோவிலில் கூடி, திருப்பாவை, திருவெம் பாவை பாடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சிவனை போற்றியபடி, முக்கிய வீதிகள் வழியாக, தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழி பட்டனர்.
முன்னதாக, மக்கள் வழிநெடுக கோலமிட்டு, அவர்களை வரவேற்றனர். இதுகுறித்து பேளூர் மணியாரர் திருமூர்த்தி கூறுகையில், ”குளிரையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், சைவ - வைணவ நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில், இறைவனை போற்றி பாடி, ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்துவது, பேளூரில் பல ஆண்டாக தொடர்கிறது,” என்றார்.