பதிவு செய்த நாள்
29
டிச
2019
05:12
சூலுார்: கோவையை அடுத்த சூலுாரில், ஏக கோடி ஸ்ரீ ஸூக்த மகா யாகம், துவங்கியது. கோவை மாவட்டம், சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன்புதுார் திருச்செந்துாரான் தோட்டத்தில், ஏக கோடி ஸ்ரீ ஸூக்த மகா யாகம், நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதிஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, குருபிரார்த்தனை, கோ, கஜ, அஸ்வ பூஜை, கும்பஸ்தாபனம் நடந்தது.திருச்செந்துார் சிவசுவாமி சாஸ்திரிகள் தலைமையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள, பல மாநிலங்களை சேர்ந்த, வேத விற்பன்னர்கள், சாஸ்திரிகள், தீட்சை பெற்றவர்கள் மற்றும் சாக்தர்கள் உள்ளிட்ட, 1,500 பேர் பங்கேற்று பாராயணம், ஹோமம் செய்கின்றனர். ரிக், யஜூர் வேத பாராயணங்கள், ஸ்ரீ ஸூக்த பாராயணம், லட்சுமி சஹஸ்ர கோடி நாம குங்குமார்ச்சனை, அஷ்ட லட்சுமி பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் தம்பதி பூஜை நேற்று நடந்தது. 11 குண்டங்களில், பல்வேறு திரவியங்கள் மூலம், 22 லட்சம் ஆவர்த்திகள் ேஹாமம் நடந்தது. நான்காவது நாள், பரம புருஷாதாரனமும், ஐந்தாவது நாள் காலை, ஏக கோடி ஸ்ரீ ஸூக்த மகா பூர்ணாஹூதி நடக்கிறது. இதுகுறித்து, தொழிலதிபர் மஸ்கட் பெரியசாமி கூறுகையில், அனைவருக்கும், கல்வி, தன, தான்ய விருத்தி, தீர்க்க ஆயுள் கிடைக்க, ஏக கோடி ஸ்ரீ ஸூக்த மகா யாகம் நடத்துகிறோம். வரும், ஜன., 2ம் தேதி மாலை, 5:00 முதல்,8:00 மணி வரை ஸ்ரீ வேங்கேடச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது,என்றார்.