பதிவு செய்த நாள்
07
ஜன
2020
11:01
திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. திண்டுக்கல் நகரில் மலையடிவாரம் சீனிவாச பெருமாள், நாகல்நகர் வரதராஜ பெருமாள், எம்.வி.எம்.,நகர் வெங்கடாஜலபதி, தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு சுவாமி, அம்பாள் ரதத்தில் கிளம்பி சொர்க்க வாசல் வழியே பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி: பழநி மேற்கு ரத வீதி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 4:00 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் 1000 கிலோவில் பிரசாதம் தயார் செய்து அன்ன தானம் நடந்தது. பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 6:00 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
வடமதுரை:
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பஜனை மடத்தில் இருந்து ராமர் சுவாமி புறப்பட்டு பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளினார். சன்னதியில் இருந்து புறப்பட்ட ஆழ்வார் சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் வந்தார்.
இதனை தொடர்ந்து கருட வாகனத்தில் அருள்பாலித்த பெருமாள் காலை 7:00 மணிக்கு சொர்க்க வாசல் வழியே புறப்பட்டு ரத வீதிகள் வழியே பக்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
எரியோடு:
எரியோடு சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் அலங்கார திருமஞ்சனத்தை தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
எ.பண்ணைப்பட்டி பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மண்டபம்புதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
சின்னாளபட்டி:
சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் வெங்கடேசப்பெருமாள் கோயிலில், பெருமாள், மகா லட்சுமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனைக்குப்பின், கோவிந்த கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் நடந்தது.
தாண்டிக்குடி இராமர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. சுவாமி சவுமிய நாரயணப்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். குதிரை வாகனத்தில் சுவாமி நகர் வலம் நடந்தது. கொடைகக்கானல், பண்ணைக்காடு, கும்பறையூர், கே.சி.பட்டியிலுள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.