பதிவு செய்த நாள்
18
ஜன
2020
11:01
கிருஷ்ணகிரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைவர் கோவிலில், பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர். கிருஷ்ணகிரி அடுத்த, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடிக்கரையில், 300 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூசணி, தேங்காய் மற்றும் அகலில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி பெங்களூருவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகளுடன், கால பைரவரை குலதெய்வமாக வழிபடும், 165 கிராமத்தினர் செய்திருந்தனர்.