மகாவிஷ்ணு கையில் ஏந்தியுள்ள சக்ராயுதமே சக்கரத்தாழ்வாராகப் போற்றப்படுகிறது. இதனை சுதர்சனம் என்று கூறுவர். இது அளவில்லாத தெய்வீக சக்தி கொண்டது. திருமாலை விட்டுக் கணநேரமும் பிரியாமல் பெருமாளுடைய திருக்கரத்தில் பொருந்தி நிற்கும் பெருமை கொண்டது. ஒவ்வொரு அவதாரத்தின்போதும் சக்கரத்துடன் பெருமாள் எழுந்தருள்கிறார். சக்கரத்தாழ்வாரே ராமாவதாரத்தின் போது, அவரின் நான்காவது சகோதரர் சத்ருக்கனராகப் பிறந்ததாக ராமாயணம் கூறுகிறது. கூகு என்ற கந்தர்வன் ஒரு முனிவரின் சாபத்தால் முதலையாக மாறினான். அவன் கஜேந்திரன் என்னும் யானையின் காலைக் கவ்வியபோது, யானை பக்தியுடன் ஆதிமூலமே என்று கதறி திருமாலை அழைத்தது. பெருமாள் சக்கரத்தை எறிந்து யானையைக் காத்தார். சக்கரத்தாழ்வாரைப் பூஜிப்பவர்கள் எதிரிகளை வெல்லும் ஆற்றல் பெறுவர். உடல்நிலை சீராகி ஆரோக்கியம் பெறுவர். கோயில்களிலும், வீடுகளிலும் சக்கரத்தாழ்வாரை சுதர்சன ஹோமம் நடத்தி வழிபடுவர். திருப்பதி, ஸ்ரீரங்கம், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அழகர்கோவில் ஆகிய திவ்ய தேசங்களில் இருக்கும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் விசேஷமானவை.