பழநி: பழநி முருகன் கோயில் உண்டியலில் 21 நாட்களில் காணிக்கையாக ரூ. 2 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரம் கிடைத்துள்ளது. பொங்கல் விழா, சபரிமலை சீசன் மற்றும் தைப்பூசம் நெருங்குவதையொட்டி பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. இதனால் 21 நாட்களில் உண்டியல்கள் திறக்கப்பட்டு நேற்று எண்ணும் பணி நடந்தது. இதில் ரொக்கமாக ரூ. 2 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 740, தங்கம்- 700 கிராம், வெள்ளி -16.480 கிலோ, 667 வெளிநாட்டு கரன்சிகள்- கிடைத்துள்ளது. கோயில் இணை ஆணையர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் அனிதா, வங்கிப் பணியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது.