பதிவு செய்த நாள்
11
பிப்
2020
10:02
திருப்போரூர்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், போதிய பணியாளர்கள் இல்லாததால், நிர்வாக பணி மற்றும் கோவில் பராமரிப்பு பாதிக்கப்படுகிறது.
*சங்கு தீர்த்த குளம் தமிழகத்தில், தொன்மையான ஆன்மிக நகரங்களில் ஒன்றாக, திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.வட மாநில யாத்ரீகர்கள், காசியிலிருந்து திருக்கழுக்குன்றம் வந்து, வேதகிரீஸ்வரரை வழிபட்ட பின்னரே, ராமேஸ்வரம் செல்கின்றனர்.ஹிந்து அறநிலைய துறைக்குச் சொந்தமான வேதகிரீஸ்வரர் கோவில், ஒற்றைக்கல்லில், 500 அடி உயரத்தில் மலை மீது அமைந்து உள்ளது.மலைக்கோவில் கீழே தாழக்கோவிலான பக்தவத்சலேஸ்வரர் கோவில், உருத்திரகோட்டீஸ்வரர் கோவில், 12 ஏக்கர் பரப்பில், சங்கு தீர்த்தக் குளம் இருக்கிறது.வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகக் கட்டுப்பாட்டில், திருவடிசூலம், ஒரகடம், ஆமூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களும் உள்ளன. 300 ஏக்கருக்கு மேல் இடமும் உள்ளது.
*நிதி ஆதாரம் இல்லை கோவில்களையும், கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும், 31 பணியிடங்கள் உள்ளன. தற்போது, கோவில் செயல் அலுவலர் உட்பட, 11 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.போதிய பணியாளர்கள் இல்லாததால், கோவிலுக்கு வருவாய் ஈட்ட முடியாத சூழல் உருவாகிறது. அன்னதான திட்டத்திற்கும், நிதி ஆதாரம் இல்லாத நிலையே உள்ளது.மேலும், கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்களின் வரிவசூல், கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்தல் உள்ளிட்ட பணிகளைக் கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே, ஹிந்து அறநிலையத் துறையினர், வேதகிரீஸ்வரர் கோவிலில், போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.