பதிவு செய்த நாள்
02
மே
2012
11:05
வாழப்பாடி: வாழப்பாடி வடபத்ர காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோபுர கலசம் மற்றும் ஸ்வாமி சிலைகள், யானை, குதிரை, பசுக்கள் புடைசூழ, கோவில் யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாழப்பாடி பாப்பான் ஏரிக்கரையில், பழமைவாய்ந்த வடபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அக்கோவில், இரண்டு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. அதன் கும்பாபிஷேக விழா, நாளை மறுதினம் (மே 4) நடக்கிறது. அதையொட்டி, நேற்று கோபுரகலசம் மற்றும் ஸ்வாமி சிலைகள், யானை, குதிரை, பசுக்கள் புடைசூழ பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்துடன் கோவில் யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று (மே 2) கோபுர கலசத்துக்கு தானியம் நிரப்பும் நிகழ்ச்சியும், மாலை கும்ப அலங்காரம் மற்றும் முதற்கால யாக வேள்வி பூஜைகளும் நடக்கிறது. நாளை (மே3) காலை 8 மணிக்கு ஸ்வாமி கண் திறப்பு, மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனமும், இரவு 7 மணிக்கு மதுரை ஆதீனத்தின் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. நாளை மறுதினம் (மே 4), அதிகாலை 4 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், 7 மணியில் இருந்து 8 மணி வரை கோபுர கலசங்கள், பரிவார மூர்த்திகள் மற்றும் ஸ்ரீவடபத்ர காளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து, கோ பூஜை சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.