புதுக்கோட்டை: திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(3ம் தேதி) காலை 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. புதுக்கோட்டையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர் கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 25ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி திருவீதி புறப்பாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை காலை எட்டு மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில் அம்பாளும், சுவாமியும் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் தொட்டு இழுக்கின்றனர். சித்திரை திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (4ம் தேதி) காலை 7 மணிக்கு ராஜ அலங்காரித்தில் சுவாமி, அம்பாள் சபாபதி கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுத்து அருள் பாலிக்கிறார். இரவு 8 மணிக்கு திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.