பதிவு செய்த நாள்
03
மே
2012
10:05
திருவெண்ணெய் நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், நேற்று சித்திரைப் பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில், கடந்த 17ம் தேதி, சித்திரைப் பெருவிழா துவங்கியது. மறுநாள், பந்தலடியில், ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், தினமும் சுவாமி வீதியுலாவும் நடந்தது.
தாலி கட்டிக்கொண்டனர் : நேற்று முன்தினம் இரவு, திருநங்கையர் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த திருநங்கையர், பூசாரிகளின் கையால் தாலி கட்டி, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு, அரவாண் சிரசுக்கு திருக்கண் திறந்து, கீரிமேடு கிராமத்திலிருந்து, புஜம், மார்பு, நத்தம் கிராமத்திலிருந்து கை, கால்கள் கொண்டு வரப்பட்டு, 21 அடி உயர தேரில் பொருத்தினர். சிவலிங்க குளம் கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட குடையுடன், காலை 7.40 மணிக்கு தேரோட்டம்
துவங்கியது.
ஒப்பாரி கோலம் : தேர் செல்லும் வழியில், 108 தேங்காய்கள் வைத்தும், குவியல் குவியல்களாக கற்பூரங்களை ஏற்றியும், திருநங்கையர் கும்மியடித்தனர். தேரோட்டத்தின் போது, விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை, தேர் மீது வீசினர். மதியம், 12 மணிக்கு நடந்த, அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கையர் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து, வளையல்களை உடைத்து, விதவைக் கோலம் பூண்டு, ஒப்பாரி வைத்தனர். பின், அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து, தங்கள் ஊருக்குத் திரும்பினர். மாலை 5 மணிக்கு, உறுமைசோறு (பலி சாதம்) படையல் நடந்தது. இதை வாங்கி சாப்பிட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற ஐதீகத்தால், பக்தர்கள் அதை முண்டியடித்து வாங்கினர். இரவு 7 மணிக்கு, காளி கோவிலில் அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின் அரவாண் சிரசு மட்டும், பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்வித்து, நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தர்மர் பட்டாபிஷேகம் : விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். நாளை, 4ம் தேதி, மஞ்சள் நீர் மற்றும் தர்மர் பட்டாபிஷேகத்துடன், சித்திரைப் பெருவிழா நிறைவடைகிறது. "தினமலர் நாளிதழ் செய்தியால், கூவாகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப் பட்டிருந்தன.விழாவை முன்னிட்டு, சென்னை, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பலா பழத்திற்கு டிமாண்ட் : கூவாகத்தில், ஆண்டுதோறும் அமோகமாக விற்பனை ஆகும் பலாப்பழங்கள், "தானே புயல் காரணமாக, விற்பனைக்கு வரவில்லை. ஒரு கடையில் குறைந்த அளவில் பலாப்பழங்கள் கொண்டு வரப்பட்டு, சிறிய பழம் ஒன்று, 100 ரூபாய் முதல் விற்கப்பட்டது. இதனால், பலாப்பழம் வாங்க வந்த கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.