பதிவு செய்த நாள்
03
மார்
2020
04:03
சிறுவன் ஒருவன் கவலையில் ஆழ்ந்திருந்தான். காரணம் வீட்டில் பெற்றோர் சண்டையிடுவது தான். பொழுது விடிந்தால் ஆரம்பமாகும் கூச்சல் இரவு வரை தொடர்வதால் எதிர்காலம் என்னாகுமோ என இனம்புரியாத பயம் ஏற்பட்டது. குடும்பத்தில் சமாதானம் எப்போது உருவாகும் என்ற கவலையுடன் காஞ்சிமடத்திற்கு புறப்பட்டான்.
அங்கு பக்தர்கள் தங்களின் மனக்குறைகளைச் சொல்லி சுவாமிகளிடம் ஆறுதல் பெறுவதைக் கண்டான். தனக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சுவாமிகளின் முன் கைகட்டி நின்றான்.
‘சவுக்கியமா இருக்கியா?’ என பரிவுடன் கேட்டார் சுவாமிகள். கண்ணீருடன், ‘சுவாமி! என் வீட்டில் ஒரே சண்டை. குடும்பம் என்னாகுமோ தெரியவில்லையே!’
சிறுவனை உற்று பார்த்த சுவாமிகள், ‘உன் அப்பாவுக்கு இரண்டு மனைவியா?’ எனக் கேட்டார்.
அதிர்ச்சியுடன், ‘‘ஆமாம் சுவாமி! எனது சித்தியை, நான் பிறக்கும் முன்பே அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சித்தியும் எங்களோடு தான் இருக்கிறார்’’ என்றான்.
அந்தக் காலத்தில் குழந்தை இல்லை என்றால் மனைவியின் தங்கையை மணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்தது. சிறுவனின் குடும்பத்தில் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது.
மணமாகிச் சில ஆண்டுகளாகி, குழந்தை பிறக்காததால் உறவினர்கள் இரண்டாம் கல்யாணம் செய்து வைத்திருப்பர். ஆனால் அதன் பிறகு மூத்த மனைவிக்கு குழந்தைப் பேறு வாய்த்து விடும். எதற்காக இரண்டாவது மனைவியாக வந்தோமோ, அதற்கான தேவை இல்லாமல் போவதால் இரண்டாம் மனைவிக்கு வருத்தமாகி விடும்.
இந்நிலையில் இரண்டு மனைவியும் ஒரே இடத்தில் இருந்தால் பாடு திண்டாட்டம் தானே? சக்களத்தி சண்டை, கணவன், மனைவிக்குள் சண்டை என தினமும் வீடு களேபரமாவது சகஜம் அல்லவா?
‘‘இதோ பார். உன் சித்தி மனசில ஆதங்கம் ரொம்ப இருக்கு! தனக்குக் குழந்தையில்லையே...ஆனால் அக்காவுக்கு மட்டும் குழந்தை இருக்கேன்னு ஏங்குறா! அதுவே நாளும் சண்டையா வெளிப்படுது. இதற்கு ஒரே வழி உன் சித்தியிடம் நீ பிரியமாக இருப்பது தான். அம்மாவைப் போல நீயும் எனக்கு அம்மா தான்னு சொல்லு. பேச்சு, நடத்தையால உன் சித்திக்கு இதை புரிய வை. உன்னை மகனா நினைச்சு அவள் அன்பு செலுத்தும் போது சண்டை மறையும். சந்தோஷம் துளிர்விடும்!`
பிரச்னைக்கு தீர்வு பெற்ற நிம்மதியுடன் பிரசாதம் வாங்கினான். சிறுவனுக்கு ஆனந்தக்கண்ணீர் பெருகியது. - திருப்பூர் கிருஷ்ணன்