உலக நலன் வேண்டி பிரசாந்தி நிலையத்தில் உலகளாவிய 24 மணிநேர அகண்ட பஜனை; வரும் 8 ம் தேதி துவக்கம்
பதிவு செய்த நாள்
06
நவ 2025 12:11
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று பகவானின் அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை ஸ்ரீசத்ய சாய் சேவா சிறப்பாக கொண்டாடி வருகிறது. நுாற்றாண்டு விழாவின் முக்கிய நாளான, நவ., 23ல், புட்டபத்தி, பிரசாந்தி நிலையத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட உள்ளனர். விழானை முன்னிட்டு முக்கிய தினமான நவ., 23ம் தேதி வரை, மரக்கன்று நடுதல், ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்கள், கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 8 ம்தேதி காலை 10:30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 9, 2025 காலை 10:30 மணி வரை, 24 மணிநேர இடைவிடாத அகண்ட பஜனை நடைபெற உள்ளது. "அகண்ட" என்றால் தொடர்ச்சியான அல்லது இடைவிடாத என்றும், "பஜனை" என்றால் இறைவனைப் போற்றும் பாடல்கள் என்று பொருள். உலகநன்மை வேண்டி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல மொழிகளில் 24 மணிநேர இடைவிடாத பக்திப் பாடல்கள் (அகண்ட பஜனை) , உலகம் முழுவதும் உள்ள சாய் பக்தர்களால் பாடப்பட உள்ளது. இது ஒரு தனிநபருக்கோ, ஒரு தேசத்துக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ செய்யப்படுவதில்லை. இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்கான நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் 110க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 1000க்கும் மேற்பட்ட சாய் சமிதிகளில் நவம்பர் 8ம் தேதி நடக்கவிருப்பது குறிபிடத்தக்கது. இந்த முழு நிகழ்வையும், ஸ்ரீ சத்ய சாய் மீடியா சென்டர் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சாய் மையங்கள் பாடும் பஜனைகளை பிரசாந்தி மந்திர் லைவ் யூடியூப் சேனலில் பிரசாந்தி நிலையத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதனை https://www.youtube.com/@PrasanthiMandirLiveRadioSai/streams மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பான SSSIO இனையதளத்தில் https://www.sathyasai.org/live – ல் காணலாம்.
|