சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரப் பாடல்கள் ஓலைச் சுவடிகளாக பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த சுவடிகள் செல்லரித்து வருவதை அறிந்த ராஜராஜசோழன், சிதம்பரம் கோயிலிலுள்ள தீட்சிதர்களிடம் சுவடிகளைப் பெற்றார். நம்பியாண்டார் நம்பி மூலம் திருமுறைகளாக தொகுத்தார். ராஜராஜசோழனின் இயற்பெயர் அருண்மொழி. இவரால் தான் தேவராப் பாடல்கள் நமக்கு கிடைத்தன. ராஜராஜசோழன் காலத்திற்குப் பிறகு அநபாய சோழனின் ஆட்சி நடந்தது. அவரது காலத்தில் ‘பெரிய புராணம்’ என்னும் 12ம் திருமுறை உருவாக்கப்பட்டது. இதை எழுதியவர் அநபாயனின் அவையில் இருந்த முதலமைச்சர் சேக்கிழார். இவரது இயற்பெயரும் அருண்மொழி தான். ஆக, ராஜராஜசோழன் என்னும் அருண்மொழியாலும், சேக்கிழார் என்னும் அருண்மொழியாலும் தமிழுக்கு பெரும் பக்திப்புதையல் கிடைத்தது.