பதிவு செய்த நாள்
05
மார்
2020
10:03
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழாவின் தேரோட்டம், இன்று, கோலாகலமாக நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரங்களில் ஒன்றாக, திருப்போரூர் விளங்குகிறது.இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான கந்தசுவாமி கோவில் உள்ளது. கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாகவும், மும்மூர்த்தி அம்சமாகவும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வீதியுலாமாதந்தோறும், பரணி கிருத்திகை, சஷ்டி, விசாகம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகா பிரம்மோற்சவ பெருவிழா, 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை மற்றும் இரவில், கிளி, வெள்ளி அன்னம், மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில், சுவாமி எழுந்தருள்கிறார்.நேற்று காலை, கந்தசுவாமி, தொட்டி உற்சவம் மற்றும் யானை வாகனம் உற்சவ அலங்காரத்தில், மாடவீதியில் உலா வந்தார்.பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம், இன்று, கோலாகலமாக நடைபெறுகிறது. காலை, 6:00 மணிக்கு, உற்சவர் கந்தனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.அலங்காரம்தொடர்ந்து, விசேஷ அலங்காரத்தில் எழும் சுவாமி, பக்தர்களின், அரோகரா அரோகரா... என்ற கோஷத்துடன் தேரடிக்கு புறப்படுகிறார். பின், சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருள உள்ளார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்து செல்வர். ஏற்பாடுகாலை, 9:00 மணிக்கு மேல் புறப்படும் தேர், கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாடவீதிகள் வழியாக, மதியம், 1:00 மணிக்கு, தேரடிக்கு இழுத்து வரப்படும்.மாலை, 6:00 மணிக்கு, பன்னீர், மரிக்கொழுந்துகளை தெளித்து, தவன உற்சவத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விழாவை ஒட்டி, திருப்போரூர் பகுதிகளில் குடிநீர், மோர், அன்னதானம், பிரசாதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.விழா ஏற்பாடுகளை, கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர்.பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம், இன்று நடைபெறுவதால், உள்ளூர் விடுமுறை விடப்படுமா என, பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்துஉள்ளனர்.