பதிவு செய்த நாள்
05
மார்
2020
10:03
கோவை: கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், நேற்று கோலாகலமாக நடந்தது.
கோவையின் காவல் தெய்வமாக, பக்தர்களால் போற்றப்படும் கோனியம்மன் தேர்த் திருவிழா, ஆண்டுதோறும் மாசி மாதம் நடப்பது வழக்கம். இந்தாண்டு தேரோட்டம், நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. பகல், 2:05 மணிக்கு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர், வடம் பிடித்து துவங்கி வைத்தனர்.
பக்தர்களின், ஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க, கோனியம்மன் தேர், ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதிகளில் ஆடி அசைந்து சென்றது. தேரோட்டத்தை முன்னிட்டு, பல்வேறு அமைப்புகள், வணிக நிறுவனங்கள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஒப்பணக்கார வீதியில், முஸ்லிம்கள் சார்பில், பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.