பதிவு செய்த நாள்
06
மார்
2020
10:03
சேலம்: செவ்வாய்ப்பேட்டை, காளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள், நேற்று குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த, 24ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று தீ மிதி விழா நடந்தது. காலை, 11:00 மணிக்கு வலம்புரி விநாயகர், காளியம்மன், வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மதியம், 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. நந்தவனத்தில் இருந்து மாலை, 4:00 மணிக்கு சக்தி அழைத்தல் நடந்தது. கருப்பணார் சாமி, பாதுகாப்பு அரணாக சக்தி கரகம் எடுத்து வீதியுலா வந்து, குண்டத்தில் இறங்கி தீ மிதித்தது. அதையடுத்து விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அலகு குத்தியும், கையில் தீச்சட்டி ஏந்தியும், குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று, தேரோட்டம் நடக்கிறது. அஸ்தம்பட்டி செல்லியம்மன் கோவிலில், பிப்.,18ல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் மாசித்திருவிழா துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில், மூலவர் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று, தீ மிதி விழா நடந்தது. விரதமிருந்து, காப்புக்கட்டிய பக்தர்கள், சின்ன திருப்பதி கோவிலில் மாலை மாற்றி வீரகந்தம் செய்தனர். உற்சவர் சுவாமிகள், வீதியுலா வந்து கோவிலை அடைந்ததும், அங்குள்ள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.