தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. தென்காசி, உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் மாசித்திருவிழா பிப்., 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. ஒன்பதாம் திருநாளான நேற்று காலை சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருளினர். 8:00 மணிக்கு விநாயகர், முருகன், கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன் ஆகியோர் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினர். சுவாமி தேரினை தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா தலைமையில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் எஸ்.பி., சுகுணா சிங் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.