பதிவு செய்த நாள்
08
மார்
2020
01:03
காரியாபட்டி: காரியாபட்டி பந்தநேந்தல் வடக்குத்தெரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கருப்பணசாமி கோயில் மாசிகளரி ஆண்டுதோறும் கடைசி வெள்ளியன்று திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அன்று நள்ளிரவு 2மணிக்கு ஆண்களால் சமைக்கப்பட்டு,ஆண்கள் மட்டுமே வழிபட்டு, பூஜை செய்து உருண்டைச் சோறு பிரசாதமாக வழங்கப்படும் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தங்கியிருக்கும் இவ்வூர் பங்காளிகள் தவறாது கலந்துகொள்வர். இத்திருவிழா நேற்று முன்தினம் அக்கிராமத்தில் நடைபெற்ற போது பங்காளிகள் கூறியதாவது: உருண்டைச் சோறு பிரசாதமாக 150 ஆண்டுகளாக தொன்றுதொட்டு வழங்கப்படுவதற்கு காரணம் உண்டு. சதுரகிரி மலையில் உருவாகி, குண்டாற்றில் கலந்து வரும் நீரில் மூலிகை கலந்து இருக்கும். ஆற்றில் ஊற்று தோண்டி அதில் கிடைக்கும் நீரில் சமைத்து உருண்டை பிடித்து பிரசாதமாக வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட பிரசாதத்தை உண்டவர்களுக்கு எந்த விதமான நோயும் அண்டவில்லை. எடுத்துக்காட்டாக, ஒருசமயம் இப்பகுதியில் காலரா நோய் தீவிரமாக பரவியது. மக்கள் பயந்து செய்வதறியாது திகைத்தனர். இந்நிலையில்தான் கருப்பணசாமியிடம் வேண்டிக்கிட்ட பூசாரி ராமசாமி, சாமியாடி கீரித்தேவர், நான்கு பக்கமும் எல்லை கோடு வரைந்து விபூதி தெளித்து வைரஸ் நோய் பரவ விடாமல் தடுத்தார்கள் என முன்னோர்கள் தெரிவித்தனர். நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள். இன்றைய நாகரீக காலத்தில் முன்னோர்கள் சொல்லிவைத்த நம்பிக்கையை இன்றளவும் பின்பற்றி வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆண்கள் அனைவரும் இந்த கோவிலில் உருண்டைச் சோறு பிரசாதமாக பெற்று, கருப்பசாமியின் அருளைப்பெற பங்காளிகள் நம்பிக்கையுடன் வந்துள்ளனர். பச்சரிசியில் தயார் செய்யப்படும் உருண்டைச் சோறு கறி குழம்புடன் சேர்த்து சாப்பிட்டாலும் காரமாக இருப்பதில்லை. சாப்பிடும் போது யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இது கருப்பணசாமியின் அருள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆச்சாரம், அனுஷ்டானம் என்பதெல்லாம் வேடிக்கை அல்ல. உண்மைகள் இருப்பதால் முன்னோர்கள் மறைமுகமான விஷயத்தை நமக்கு உணர்த்தி விட்டுச் சென்றனர். நோயில் இருந்து காத்து, கருப்பசாமியின் அருளைப்பெற வேண்டும் என்பதே வடக்குத்தெரு பங்காளிகளின் விருப்பம், என்றனர்.