பதிவு செய்த நாள்
09
மார்
2020
11:03
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, உற்சவ மூர்த்திகள் ரிஷப மற்றும் யானை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் இன்று தேரோட்டம் நடக்கிறது. ஓசூர் மலை மீதுள்ள, மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 3 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வாச்சீஸ்வர குருக்கள் தலைமையில் கொடிமரத்துக்கு பூஜை செய்யப்பட்டு, மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் உற்சவமூர்த்தி, மலை அடிவாரத்தில் உள்ள தேர்ப்பேட்டை கல்யாணசூடேஸ்வரர் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கடந்த, 3 இரவு முதல், சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாகனம், நாகவாகன உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு ரிஷப வாகன உற்சவம் நடந்தது. நேற்றிரவு, 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், 10:30 மணிக்கு, யானை வாகன உற்சவம் நடந்தது. முக்கிய வீதிகளில் உலா வந்த உற்சவ மூர்த்திகளை, திரளான பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் இன்று காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநில பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.