பதிவு செய்த நாள்
10
மார்
2020
10:03
உத்திரமேரூர்:மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோவில், மாசி மகம் உற்சவத்தையொட்டி, மானாம்பதி கூட்டுசாலையில், நேற்று அதிகாலை, 20 ஊர் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி, பெரியநாயகி உடனுறை வானசுந்தரேஸ்வரர் கோவிலில், மாசி மகம் உற்சவம் நடைபெற்றது.நேற்று முன்தினம் இரவு, அம்பிகையுடன், வானசுந்தரேஸ்வரர் வாகன மண்டத்தில் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மஹா தீபாராதனையும், வாண வேடிக்கையும் நடந்தது.தொடர்ந்து, அம்பிகையுடன் சுவாமி, மானாம்பதி கூட்டுசாலையில் எழுந்தருளினார். அங்கு, பெருநகர் பட்டு வதனாம்பிகை அம்பிகையுடன், பிரம்மபுரீஸ்வரர், மானாம்பதி, தண்டரை, நெடுங்கல் என, 20 ஊர் சுவாமிகள், ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.அனைத்து சுவாமிகளுக்கும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.மாமல்லபுரத்தில், ஸ்தல சயன பெருமாள், சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில் உற்சவர் வரதராஜர் மற்றும் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலிலும், தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
வாலாஜாபாத் அடுத்த, சீயமங்கலம் கிராமத்தில், பாலாறு ஆற்றங்கரையை ஒட்டி, சுங்குவார்தோப்பு உள்ளது.இங்கு, மாசி மாத பவுர்ணமி தினத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் மற்றும் இளையனார்வேலுார் சுப்ரமணிய சுவாமி ஆகியோர், உற்வச மண்டபத்தில் எழுந்தருளுவர்.நடப்பாண்டு, மாசி திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, இவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.