திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப உற்ஸவத்தில் ‘ஹைலைட்’ தீப வழிபாடு தான். உத்ஸவத்தின் கடைசி 3 நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் நள்ளிரவு வரை தெப்பக்கரையைச்சுற்றி விளக்கேற்றி பெருமாளிடம் பிரார்த்தித்தனர்.
இன்றும் அந்த வழிபாடு தொடர்கிறது. கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் தெப்பக்குளத்தைச் சுற்றி குவிந்ததால் உள்ளாட்சி நிர்வாகத்தினர் வாகனம் மூலம் விளக்குகளை எடுத்துச் சென்றனர். இந்த வழிபாட்டிற்கு வரும் பெண்கள் முதலில் அகல் விளக்கை சுவாமியிடம் வைத்து பிரார்த்தித்து வீட்டிற்கு கொண்டு சென்று விளக்கில் காசும், துளசியும் வைத்து பூஜையறையில் வைக்க வேண்டும். அதில் பெருமாளும் லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். இப்படிச் செய்பவர்களுக்கு கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசித் தெப்பத்தின் போது தெப்பக்கரையில் அந்த தீபத்துடன் மற்றொரு நெய் தீபத்தையும் ஏற்றி வழிபடுவர். இந்த விளக்கை புதிதாக வேண்டுபவர்கள் எடுத்து செல்லலாம். தீப வழிபாட்டின் போது பரவிய தவறான தகவல்களால் மஞ்சள் பை, எண்ணெய் பிளாஸ்டிக் டப்பா போன்ற பாலிதின்,பிளாஸ்டிக் பொருட்களை குளத்தில் பக்தர்கள் வீசுவது தொடர்ந்தது.