திருப்புவனம் : கொரோனா வைரசால் கோயில்கள் பூட்டப்பட்டதையடுத்து பொதுமக்கள் வீட்டு வாசல்களில் தண்ணீர் வைத்து பரிகார பூஜை செய்தனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிரட்டி வருகிறது. தமிழகத்தில் கோயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. தினசரி பூஜைகள் மட்டுமே நடக்கிறது. தென்மாவட்டங்களில் மாரியம்மன் கோயில்களில் பங்குனி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாக்கள் நடைபெறும் காலத்தில் கோயில் நடை பூட்டப்பட்டிருப்பதால் தெய்வகுற்றம் ஏற்பட்டதாக கருதி திருப்புவனத்தில் பெரும்பாலான வீட்டு வாசல்களில் பாத்திரங்களில் மஞ்சள் தண்ணீர் நிரப்பி அதில் வேப்பிலை, மல்லிகை பூ போட்டு வைத்துள்ளனர். திருப்புவனத்தில் நேற்று மாலை 4:00 மணி முதல் பெரும்பாலான வீட்டு வாசல்களில் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. ஆறு மணிக்கு மேல் வேப்பிலையை எடுத்து கூரைகளில் சொருகி வைத்து விட்டு மஞ்சள் தண்ணீரை வாசல் முழுவதும் தெளித்து வருகின்றனர்.