மேல்மலையனூர் கோவில் குறித்து வதந்தி: நள்ளிரவில் வாசலில் தீபம் ஏற்றிய கிராமமக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2020 04:03
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் சரிந்ததாக பரப்பப்பட்ட வதந்தியால் கிராம மக்கள் வாசலில் கலசம் வைத்து விளக்கேற்றி பரிகார பூஜை செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான கோயில்கள் குறித்து திடீரென வதந்திகளை பரப்பி, மக்களை தீபம் ஏற்றச் சொல்வதும், பரிகாரமாக ஏதேனும் பூஜை செய்ய செல்வதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் குறித்து வாட்ஸ்ஆப்களில் திடீரென வதந்தி பரவியது. புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் தேர் சரிந்து விழுந்ததாக இதில் பொய்யான தகவல் பரப்பப்பட்டது.
இதையடுத்து ஏராளமானவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக இது குறித்து விசாரிக்க துவங்கினார். கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது இது போன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதும் வழக்கமான பூஜைகளை பூசாரிகள் காலை, மாலை என இருவேளையும் செய்துவிட்டு கோவில் நடை சாத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். வதந்தியை பரப்பியவர்கள், பரிகாரமாக வீடுகளுக்கு முன்பு கலசம் வைத்து, கலசத்தை சுற்றி அகல் விளக்கு ஏற்றும்படி செய்தி பரப்பி னர். இதையடுத்து பல கிராமங்களில் இரவு 10 மணிக்கு பிறகு வாசலில் கலசம் வைத்து, அகல் விளக்கேற்றினர். இச்சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.