ஓசூர்: தளி சந்தான வேணுகோபால ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி வாகன உற்சவம், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. 5ம் தேதி ஸ்வாமிக்கு கல்யாண உற்சவமும், 6ம் தேதி காலை யாத்ரா தானம் நடந்தது. அதன் பின் மதியம் 2.30 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா விமர்ச்சையாக நடந்தது. சந்தான வேணுகோபால ஸ்வாமி உற்சவ மூர்த்தி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அமர வைக்கப்பட்டு விசேஷ பூஜைகள் மற்றும் மங்காரத்தி நடந்தது. அதன் பின் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர் மாலை நிலையை வந்தடைந்தது. நேற்று பல்லக்கு உற்சவம் நடந்தது. சந்தன வேணுகோபால ஸ்வாமி, கோதண்டராமசுவாமி, கங்தேஸ்வர ஸ்வாமி, கன்னிகா பரமேஷ்வரி, மாரியம்மாள் உள்ளிட்ட பல தெய்வங்கள் பல்லக்கு உற்சவங்களில் எடுத்து வரப்பட்டன. விழாவையொட்டி கரகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நாளை 9ம் தேதி சயன உற்சவத்துடன் விழா முடிகிறது. தளி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.