பதிவு செய்த நாள்
08
மே
2012
10:05
ஆத்தூர்: ஆத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவையொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.ஆத்தூர், தாயுமானவர் தெருவில், பிரசித்தி பெற்ற தர்மராஜர் மற்றும் திரவுபதி அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடத்தப்படுகிறது.அதன்படி, சித்திரை தேர்த்திருவிழா, நேற்று காலை 6 மணியளவில், கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அப்போது, திரவுபதி அம்மனுக்கு பால், பழம், பன்னீர் அபிஷேக பூஜைகள் நடந்தது. பின், தங்கம், வெள்ளி கவசங்கள், புஷ்ப சிறப்பு அலங்காரத்தில், பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.வரும் 23ம் தேதி, காலை 9 மணிக்கு திருக்கல்யாணமும், 24ம் தேதி, பகாசூரம் பீமன் மங்கல முனிக்கு சோறு கொடுத்தல், துகில் தருதல், அர்ச்சுனன் தபசு நாடகமும், இரவு 7 மணிக்கு மூன்று சிறிய தேர்களில் ஸ்வாமி ஊர்வலம் நடக்கிறது.தொடர்ந்து, வரும் 25ம் தேதி, மாலை 5 மணிக்கு, தீமிதித்தல், இரவு 10 மணிக்கு துரியன் படுகளம் செய்தல், 26ம் தேதி காலை 8.30 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், மாலை 3 மணியளவில், அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், 27ம் தேதி, சப்தாபரணம், 28ம் தேதி, வசந்த ஊஞ்சல் உற்சவம், 29ம் தேதி, போர்மன்னன் பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியர்கள் செய்து வருகின்றனர்.