பதிவு செய்த நாள்
05
மே
2020
08:05
திருவண்ணாமலை: ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில், மேலும், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது,’’ என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு வரும், 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை வரை, 2,132 பேர் கண்டறியப்பட்டு, 21 முகாம்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை, 350 பேரின் பரிசோதனை முடிவுகளில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, மாவட்டத்தில், 15 பேர் பாதிக்கப்பட்டு, 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் மேலும், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்தம், 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சித்ரா பவுர்ணமி திதி வரும், 6 ம் தேதி இரவு, 7:28 மணி முதல், 7 மாலை, 5:14 மணி வரை உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.