பதிவு செய்த நாள்
05
மே
2020
10:05
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், 33 சதவீத ஊழியர்களுடன் பணிகள் துவங்கப்பட்டன. கொரோனா நோய் தொற்று காரணமாக, மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் திருமலையிலும், மார்ச், 18 முதல் பக்தர்களுக்கு, தரிசன அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் வருகை முழுதும் நிறுத்தப்பட்டதால், திருமலையில் ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்தது. மேலும், ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதுடன், குறைந்த எண்ணிக்கையில் பணிபுரிய, ஊழியர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப் பட்டனர். அதிகாரிகள், வீடுகளில் இருந்து பணிபுரிய துவங்கினர். திருமலைக்கு செல்லும் மலைப் பாதைகள் மூடப்பட்டதால், ஊழியர்கள் திருமலையில் ஒரு வாரம் சுழற்சி முறையில் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், 40 நாட்களுக்கு பின், ஊரடங்கில் சில தளர்வுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நேற்று முதல், 33 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை கடைப்பிடித்து, தேவஸ்தான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டதாக, தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்தகுமார் தெரிவித்தார்.