கோவில் உபரி நிதியில் ரூ.10 கோடி: அறநிலைய துறை உத்தரவு வாபஸ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2020 11:05
சென்னை : முதல்வர் நிவாரண நிதிக்கு 47 கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கும்படி அறநிலைய துறை முதன்மை செயலர் பிறப்பித்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமலர் நாளிதழின் வேலுார் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி தாக்கல் செய்த மனு: ஹிந்து சமய அறநிலைய துறையின் முதன்மை செயலர் ஏப்ரல் 22ல் ஒரு சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். 47 கோவில்களின் நிர்வாக அதிகாரி உதவி ஆணையர் துணை ஆணையர் இணை ஆணையர்களுக்கு இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கும்படி அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அறநிலைய துறை சட்டத்துக்கு எதிரானது. உபரி நிதியை பயன்படுத்துவதற்கான விதிகளில் உள்ள நடைமுறையை மீறுவதாகவும் உள்ளது. 47 கோவில்களுக்கும் வரலாற்று பாரம்பரியம் உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் ஓதுவார்கள் வேத பாராயணிகள் இசை கலைஞர்கள் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும்குறைவானது. இவர்களின் நிலை குறித்து அரசுக்கு மனு அனுப்பி உள்ளேன். சுற்றறிக்கை பிறப்பிக்க முதன்மை செயலருக்கு அதிகாரமில்லை. எனவே சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். கோவில்களை சார்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு நிதி உதவிவழங்க ஏற்பாடு செய்யும்படி அறநிலைய துறை முதன்மை செயலருக்கு உத்தரவிடவேண்டும்.10 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அதை கோவில்களுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இதே போன்று சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி ஆலய வழிபடுவோர் அமைப்பின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் வெங்கடேஷ்குமார் ஆகியோரும் மனுக்கள் தாக்கல்செய்தனர். இம்மனுக்கள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜராகி சுற்றறிக்கையை திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். இதையடுத்து சுற்றறிக்கையை திரும்ப பெற்று அதன் விபரங்களை மே 8ம் தேதி தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.