1812ல் ரோஸ்பீட்டர் என்ற ஆங்கிலேய கலெக்டர் மதுரையில் பணியாற்றினார். அவர் குதிரை மீதேறி மதுரை நகரை வலம் வருவார். மீனாட்சியம்மன் மகிமை பற்றி கேள்விப்பட் அவர், குதிரையை விட்டு இறங்கி கோயில் எல்லையை நடந்தே கடப்பார். இப்படி தனக்கு மரியாதை செலுத்திய பக்தனின் உயிரைக் காத்தாள் மீனாட்சி. ஒருநாள் இரவு மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. ரோஸ்பீட்டர் ஒரு பழைய கட்டிடத்தில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி ஒருத்தி வாசலுக்கு வந்தாள். மின்னல் ஒளியில் அவளின் பட்டுப்பாவாடை தெரிந்தது. ‘ரோஸ்பீட்டர் கம் அவே’ என ஆங்கிலத்தில் கூப்பிட்டாள் சிறுமி. குரல் கேட்ட கலெக்டரும் வெளியே வந்தார். அவ்வளவு தான்! இடி விழுந்து கட்டிடம் நொறுங்கியது. ரோஸ்பீட்டர் திடுக்கிட்டு பார்த்த போது சிறுமி மறைந்தாள். மறுநாள் கோயிலுக்குச் சென்று சிறுமி பற்றி அர்ச்சகர்களிடம் சொன்ன போது, ‘‘மதுரை அரசாளும் மீனாட்சியே சிறுமியாக வந்து தங்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள்.’’ என்றனர். ‘‘மீனாட்சிக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டுமே?’’ என அர்ச்சகர்களிடம் ஆலோசித்தார். ‘‘சிறுமி என்ன நகை அணிந்திருந்தாளோ, அதில் ஒன்றை காணிக்கையாக கொடுங்கள்’’ என்றனர். ‘‘இல்லை! அவளிடம் இல்லாத நகைகளா... அவள் பாதங்களைத் தாங்கும் தங்கத்தால் ஆன அங்கவடிகளை காணிக்கையாகத் தர விரும்புகிறேன்’’ என்றார் ரோஸ்பீட்டர். ஆம்...இப்போதும் குதிரை வாகனத்தில் பவனி வரும் போது, ரோஸ் பீட்டர் அளித்த தங்க அங்கவடிகளே அம்மனின் பாதங்களை தாங்கியிருக்கும்.