சபரிமலை : சபரிமலை கோவிலில் மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, ஊழியர்களுக்கு திருநீறு வழங்கினார். வேறு பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்துவார். பின்னர் கணபதி ஹோமமும், தொடர்ந்து உஷபூஜை, உச்சபூஜை நடத்தப்பட்டு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அத்தாழபூஜைக்கு பின்னர் இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மே 19- வரை எல்லா நாட்களிலும் இதே நேரங்களில் பூஜைகள் நடைபெறும். நெய்யபிஷேகம், படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. 19- இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். கொரோனா காரணமாக கடந்த மாதம் போன்று இந்த மாத பூஜையிலும் பக்தர்கள் பங்கேற்க முடியாது. வழிபாடுகள் நடத்த விரும்பும் பக்தர்கள் www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.