பதிவு செய்த நாள்
24
மே
2020
12:05
திருப்பதி : ஆந்திராவின், 12 மாவட்டங்களில் உள்ள, திருப்பதி திருமலை தேவஸ்தான தகவல் மையங்களில் விற்பதற்காக, திருமலையிலிருந்து லட்டு பிரசாதம், லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஊரடங்கு அமலில் இருப்பதால், திருமலை ஏழுமலையான் தரிசனம், 60 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசிக்க முடியாவிட்டாலும், லட்டு பிரசாதமாவது வழங்க வேண்டும் என, தேவஸ்தானத்திடம், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால், ஆந்திராவின், 12 மாவட்டங்களில் உள்ள, திருப்பதி திருமலை தேவஸ்தான தகவல் மையங்களில், லட்டு விற்பனை செய்ய முடிவு செய்து, விசாகபட்டினம், விஜயவாடா, ஸ்ரீகாகுளம் என, 12 மாவட்டங்களில் உள்ள தகவல் மையங்களுக்கும், நேற்று காலை லட்டு பிரசாதத்தை எடுத்துக் கொண்டு லாரிகள் புறப்பட்டன.
நாளை முதல், ஆந்திராவில் உள்ள அனைத்து தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், தகவல் மையங்கள் உள்ளிட்ட இடங்களில், லட்டு பிரசாதம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பக்தர்களின் வசதிக்காக, 50 ரூபாய் லட்டு பிரசாதத்தின் விலையை, பாதியாக குறைத்து, 25 ரூபாய்க்கு, தேவஸ்தானம் விற்பனை செய்ய உள்ளது.ஒவ்வொரு மாவட்ட மையங்களிலும், 20 முதல், 30 ஆயிரம் லட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. விரைவில், சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும், லட்டு விற்பனை துவங்கும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.