காரியாபட்டி: காரியாபட்டி இசலிமடை அருகே பொட்டல்குளம் கிராமத்தில் கால லிங்கேஸ்வரர் எனும் சிவன் கோயில் உள்ளது. திருச்சுழி பூமிநாதர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களில் முதன்மையானதாக கருதப்படுவது கால லிங்கேஸ்வரர் கோயில் தான். புராணங்களில் இக்கோயிலின் பெருமை சொல்லப்பட்டுள்ளது. மிருகண்டு முனிவர், மருத்துவவதி தம்பதியருக்கு நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அப்போது கால லிங்கேஸ்வரர் கோயிலில் மிருகண்டு முனிவர் மனமுருகி வேண்டியதால் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை தான் மார்க்கண்டேயர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் சிதிலமடைந்து தற்போது சுயம்பு லிங்கம், நந்தி சிலை மட்டுமே உள்ளது. அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் சிவராத்திரி அன்று திருவிழா நடத்துவது வழக்கம். தற்போது ஊரடங்கு உத்தரவால் ஒரு சிலர் மட்டுமே கோயிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர்.
சாமி தரிசனம் செய்தவர்கள் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியன்று பூஜை செய்யும் போது மழை கொட்டும். அதேபோல் இந்த முறையும் நல்ல மழை பெய்தது. திறந்த வெளியில் உள்ள இக்கோயிலில் பக்தர்கள் தங்கி சாமி தரிசனம் செய்ய வசதிகள் இல்லை. ராமநாதபுரம் சமஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை சீரமைத்து பக்தர்கள் தங்கி தரிசித்துச் செல்ல வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்றனர்.