பதிவு செய்த நாள்
11
ஜூன்
2020
04:06
தியமான்கோட்டை: கோவில்களை வழிபாட்டுக்கு திறக்கக்கோரி, ஹிந்து முன்னணியினர், கோவில்கள் முன், ஒற்றை காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கால் கடந்த, மார்ச், 24 முதல், கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை இருந்தது. தமிழகத்தில் வழிபாட்டுக்கு கோவில்கள் திறக்கப்படவில்லை. இதை கண்டித்தும், கோவில்களை வழிபாட்டுக்கு திறக்க வலியுறுத்தியும், தர்மபுரி மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராஜ் தலைமையில், அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் முன், சமூக இடைவெளியுடன் ஒற்றை காலில் நின்று, ஹிந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் முன், ஹிந்து முன்னணி நகர தலைவர் சுரேஷ் தலைமையில், போராட்டம் நடந்தது. அதேபோல், ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் வாசல் முன், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வீரபாகு, மணிகண்டன், பாபு ஜி ஆகியோர், ஒற்றை காலில் நின்று போராட்டம் நடத்தினர்.
* வேலூர், செல்லியம்மன் கோவில் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹிந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில், ஒற்றை காலில் நின்று கோவில்களை திறக்க கோஷம் எழுப்பினர். வேலூர் மாவட்டத்தில், 38 கோவில்கள், ராணிப்பேட்டையில், 29, திருப்பத்தூர் மாவட்டத்தில், 22 கோவில்களின் முன் நேற்று போராட்டம் நடந்தது.
* திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் முன், ஹிந்து முன்னணி சார்பில், அதன் கோட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.