* தாய் அன்பே மேலானது. பசு உள்ளிட்ட உயிர்கள் எல்லாம் ‘அம்மா’ என்றே அழைக்கின்றன. * நாளை என்பது நம் கையில் இல்லை. பொம்மலாட்ட பொம்மை போல எல்லா உயிர்களையும் கடவுளே இயக்குகிறார். * பிறர் பொருளை அபகரிக்காமல், மற்றவர் உழைப்பைச் சுரண்டாமல் உழைத்து வாழ வேண்டும். * மக்கள் செய்யும் பாவம் அனைத்தும் நாடாளும் மன்னரையே சேரும். * ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறு உலகில் நம்முடன் வருவது ஒருவர் செய்த தர்மம் மட்டுமே. * எதிலும் அலட்சிய எண்ணம் கூடாது. அப்படி செயல்பட்டால் அது பேராபத்தில் முடியும். * கடவுளை நினைத்து செய்யும் எந்தச் செயலும் கண்டிப்பாக நிறைவேறும். * ஒருவன் எந்நிலையிலும் கடவுளின் திருநாமம் ஜபிப்பதை லட்சியமாக கொள்ள வேண்டும். * தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டால் பேராசை என்னும் படுகுழியில் விழ நேரிடும். * மனம் இடைவிடாமல் எதை நினைக்கிறதோ அதை கண்டிப்பாக அடைந்தே தீரும். * எடுத்துச் சொல்வதை விட அதன்படி வாழ்ந்து காட்டுவது மிக சக்தி வாய்ந்தது. * அதிகமான பொருட்கள் இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கைத்தரம் உயர்வதில்லை. உண்மையான வாழ்க்கைத்தரம் என்பது மனநிறைவுடன் வாழ்வதே. * அவசியமில்லாமல் கூடுதலாக சம்பாதிப்பதும், ஆடம்பரமாகச் செலவழிப்பதும், பூதம் காப்பது போல் பணத்தை வங்கியில் சேமிப்பதும் தவறான செயல். * பாவ சிந்தனைகளை போக்கிட தர்ம சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். * பிறரிடம் உள்ள குற்றங்களை பார்க்காமல் நற்குணங்களை மட்டுமே பார்க்கப் பழக வேண்டும். * தினமும் அரை மணி நேரமாவது தியானம் செய்வது அவசியம். * ஒருவரைப் புகழ்ந்து பேசுவதற்கும் கட்டுப்பாடு அவசியம். ஒரேயடியாகப் புகழ்ந்தால் அகங்காரம் உண்டாகி விடும். * நேரத்தை வீணாக்குவது பொழுது போக்கல்ல; பிறருக்கு சேவை செய்வதே பயனுள்ள பொழுதுபோக்கு. * எண்ணத்தால் துாய்மை பெறவே வழிபாடு செய்கிறோம். நாம் செய்யும் பூஜையால் கடவுளுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. * மனதால் தான் துன்பம் உண்டாகிறது. ஆசைப்படாதே என மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல. * பாவத்திற்கான தண்டனை, புண்ணியத்திற்கான நன்மை அதற்குரியவனை வந்தடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.