*விதியை விதையாகவும், முயற்சியை நிலமாகவும் ஒப்பிடலாம். விதைகள் இல்லாத நிலமும், விதைக்கப்படாத விதையும் அறுவடைக்குத் தயாராவதில்லை. *விதையும் நிலமும் ஒன்று சேர்ந்தால் தான் பயிர்கள் வளர்வது போல, விதியும் முயற்சியும் சேர்ந்துதான் ஒருவனுக்கு வளர்ச்சியைத் தருகின்றன. *செயல்களைச் செவ்வனே செய்பவன் செயலுக்கான பலனை அடைகிறான். நற்செயல் களால் இன்பமும், தீயசெயல்களால் துன்பமும் விளைகின்றன. *முயற்சி இருந்தால்ஒருவனால் எதையும் சாதிக்கமுடியும். ஆனால், செயலற்று வாளாவிருந்தால் எதையும் வாழ்வில் பெறமுடியாது. *ஒரு சிறு நெருப்பானது வீசப்படும் காற்றின் வேகத்தால், பெரிய தீயாக மாறுவதுபோல, சாதகமான விதி பலவீனமாகஇருந்தாலும், முயற்சியால் அதனை பன்மடங்கு பெருக்கிக் கொள்ளமுடியும். *எப்போதும் பேராசையில் உழன்று கொண்டிருக்கும் ஒருவன் விதி ஒருபோதும் உதவுவதில்லை. *எண்ணெய் இல்லாத விளக்கு அணைந்துவிடுவதைப்போல முயற்சி இல்லாமல் சோம்பேறியாக இருப்பவனிடம் சாதகமாக இருக்கும் விதி தன் ஆதிக்கத்தை இழந்துவிடுகிறது. *ஒருவன் தானே தனக்கு நண்பனும், பகைவனுமாக இருக்கிறான். நற்பண்புகள்ஒருவனிடம் இருந்து விட்டால் வாழ்வில் சாதித்துக் காட்டமுடியும். *புனித நதிகளில் நீராடுவதால் நம் உடல் தூய்மைஅடைவதோடு, மனமும் தூய்மை பெறுகிறது. *பின்விளைவை யோசிக்காமல் எந்தச் செயலிலும் இறங்குவது கூடாது. *எப்போதும் உண்மையைப் பேச வேண்டும். பிறருக்கு நன்மை தருவதாகவும் இருக்க வேண்டும். *மற்றவர் குழம்பும் விதத்திலோ, தவறாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசுவது கூடாது. மிக்க வருத்தம் அளிக்கும் உண்மைகளைபிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. *தீய வழியில் செல்பவன் சிறிதுகாலம் வளமுடன் வாழ்வது போல இருக்கும். ஆனால்,முடிவில் முற்றிலும் அழிந்து போவது உறுதி. நேர்மைவழியில் நடப்பவனுக்கு வாழ்வில் என்றும் தோல்வி கிடையாது என மனுநீதி குறிப்பிடுகிறது. *பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு, கருணை போன்ற நற்பண்புகளை சிறுவயது முதலே உருவாக்க முயல வேண்டும். அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்கவேண்டியதும் அவசியம். *மனிதன் வாழும் காலத்தில் பிறருக்கு நன்மை செய்ய முயல வேண்டும். இறந்த பின்,பிறருக்கு எந்தவிதத்திலும் அவன் பயன்படப்போவதில்லை. *மற்றவர்களின் நலனுக்காக தங்கள் நலனைக் கூட தியாகம் செய்பவர்களே மகான்கள். அவர்களின் மனதில் சுயநலத்திற்கே இடமே இல்லை. -வித்யாதீர்த்தர்