முல்லா குடியிருக்க ஒரு வீட்டின் கீழ்ப்பகுதியை அன்பளிப்பாக கொடுத்தார் மன்னர். அந்த வீட்டின் மாடிப்பகுதியில் படைத்தளபதி குடியிருந்தார். தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடித்தாள். அப்போது இடியோசை மாதிரி சப்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த முல்லா ஓரிரு முறை தளபதியிடம் முறையிட்டும் பலனில்லை. ஒருநாள் தளபதி கோபத்துடன், ‘‘ மன்னர் அன்பளிப்பாக கொடுத்த வீடு இது. என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்க நீ யார்?’’ எனக் கத்தினார். மறுநாள் காலையில் முல்லா தன் வீட்டுப்பகுதியை கடப்பாறையால் இடிக்கத் தொடங்கினார். ‘‘என்ன செய்கிறாய்?’’ என்றார் தளபதி. ‘‘வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டப்போகிறேன்’’ என்றார் முல்லா. அதிர்ச்சியடைந்த தளபதி,‘‘ நீர் என்ன முட்டாளா... கீழ்வீட்டை இடித்தால் மேல்வீடு என்னாகும் என யோசித்தீரா?’’ என்றார். ‘‘மேல்வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை’’ என்று சொல்லிய முல்லா பணியைத் தொடர்ந்தார். பதறிய தளபதி, ‘‘நாம் ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்வது தான் நல்லது. இருவரும் நண்பர்களாக இருப்போம்’’ என்றார். ‘‘நான் எப்போதும் நண்பன்தான்!’’ என்று சொல்லிச் சிரித்தார் முல்லா.