ஸெய்யதுனா யஹ்யா என்பவர், ‘‘ இறைவா! நான் சாத்தானின் உண்மையான வடிவைக் காண விரும்புகிறேன். அவனிடம் சிலவற்றை கேட்க விரும்புகிறேன்,” என்றார். இறைவனும் அனுப்பி வைத்தான். சாத்தானின் தலையில் கொக்கிகள் இருந்தன. இடுப்பின் இருபுறமும் இரண்டு குடங்கள் கட்டப்பட்டிருந்தன. காலில் சலங்கை கட்டியிருந்தான். யஹ்யா அவனிடம்,“ உன் தலை மீது என்ன உள்ளது?’ என்றார். “அது மனிதர்களின் அறிவை உறிஞ்சும் ஆயுதம்” என்றான். “குடங்களை ஏன் தொங்க விட்டுள்ளாய்?” என கேட்டதற்கு, ‘‘மனிதர்கள் இறக்கும் நேரத்தில் அதில் சொர்க்கத்தின் நீர் உள்ளது என்று சொல்லி நம்ப வைப்பேன். அவர்களும் நம்பி குடிப்பர். அப்போது அவர்களிடம் உள்ள இறை நம்பிக்கை நீங்கி விடும்,” என்றான். “சலங்கை கட்டியதன் நோக்கம் என்ன?” என்று கேட்டதற்கு, “மனிதர்கள் அதன் ஒலி கேட்டு நான் ஆட்டுவித்தபடி ஆடுவார்கள்’’ என்றான். “நீ மனிதர்களை எப்போது கெடுக்கிறாய்?” எனக் கேட்டதற்கு,“அவர்கள் வயிறு முட்ட சாப்பிட்டிருக்கும் போது” என பதிலளித்தான். “என்னிடம் எப்போதாவது உன் வேலையைக் காட்டியிருக்கிறாயா?” எனக் கேட்டார் யஹ்யா. “ஆம்...ஒருநாள் இரவு அதிகம் சாப்பிட்டு விட்டீர். அன்று உம்மை இறைவணக்கத்தில் ஈடுபடாதபடி சோர்வை ஏற்படுத்தினேன்’’ என்றான். “அப்படியானால் இனி இறைவன் மீது ஆணையாக அதிகம் சாப்பிட மாட்டேன்” என்று உறுதிமொழி எடுத்தார் யஹ்யா.