ஒருநாள் இரவு 11 மணி. காஞ்சி மகாசுவாமிகளை தரிசிக்க வெளியூர் பக்தர்கள் சிலர், அப்போது தான் பேருந்தை விட்டு மடத்தின் அருகில் இறங்கினர். ஓட்டல்கள் எல்லாம் மூடிக் கிடந்தது. வந்தவர்களுக்கோ பசி. ‘‘பசி கிடக்கட்டும்... முதலில் மடத்திற்குச் செல்வோம்’’ என ஒரு பக்தர் சொல்லவும் அவர்கள் மடத்திற்குள் நுழைந்தனர். அப்போது சுவாமிகள் துாங்கவில்லை. ஜபம் செய்தபடி இருந்தார். பக்தர்களின் பேச்சு சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்தார். சுவாமிகளின் தரிசனம் கிடைத்ததைக் கண்டு பரவசப்பட்டனர். வணங்கிய பக்தர்களுக்கு ஆசியளித்த சுவாமிகள், ‘சாப்பிட்டாச்சா?’ என விசாரித்தார். அவர்கள் மவுனமாக நின்றனர். சாப்பிடாததை புரிந்து கொண்ட சுவாமிகள் பணியாளர் ஒருவரை அழைத்தார். ‘‘பூஜையில் நிவேதனம் செய்ய வாங்கிய பழங்களை பெட்டியில் பூட்டி வைத்திருப்பார்கள். அந்த பெட்டியைத் திற’’ என்றார். ‘‘பெட்டிச்சாவி வைத்திருப்பவர் அசந்து துாங்கி விட்டாரே?’’ என்று தயங்கினார் பணியாளர். ‘‘பாவம்...எழுப்பாதே! அந்தப் பெட்டிக்கு இன்னொரு சாவி கூட உண்டு. சாவிகள் மாட்டியிருக்கும் இடத்தில் போய் பார். அதைக் கொண்டு திறக்கலாம்’’ என்றார் சுவாமிகள். சொன்னபடியே அந்த சாவியை எடுத்து திறந்த பணியாளர், நிவேதனத்திற்காக இருந்த பழங்களை ஒரு மூங்கில் கூடையில் கொண்டு வந்தார். அதை பக்தர்களுக்கு கொடுத்தார் சுவாமிகள். அவர்களும் பசியாறினர். பிறகு சுவாமிகள் உத்தரவுப்படி இரவில் மடத்திலேயே துாங்கினர். பூஜைக்குரிய பழங்களை பாதுகாப்பவர் அதிகாலையிலேயே கண் விழித்தார். குளித்து விட்டு பூஜைக்கு தயாரானார். பெட்டியைத் திறந்த போது பழங்களைக் காணாமல் திகைத்தார். ‘‘பழங்களை யாரோ திருடி விட்டார்களே!’’ எனக் கூச்சலிட்டார் அவர். சிரித்தபடியே வந்த சுவாமிகள் ‘நான்தான் அந்த திருடன்’ என்று ஒப்புக்கொண்டார். கூச்சலிட்டவர் ‘சிவ சிவா’ என்று கன்னத்தில் இட்டுக் கொண்டார். ‘நேற்றிரவு பசியோடு மடத்திற்கு வந்தவர்களுக்குப் பழங்களைக் கொடுக்கச் சொல்லிவிட்டேன்!` என்றார் சுவாமிகள். ‘இப்போது நிவேதனத்திற்கு என்ன செய்வது!’ என அங்கலாய்த்தார் அவர். ‘கடையில் பழங்களை வாங்கி வரச் சொல்!’ என்ற சுவாமிகள் மேலும் ‘‘ அன்பே கடவுள். பக்தர்களுக்கு கொடுத்த பழங்கள் கூட, கடவுளுக்கு நிவேதனம் செய்த கணக்கில் தான் வரும்!’’ சுவாமிகள் சொன்னதைக் கேட்ட அவருக்கு மெய்சிலிர்த்தது.