பதிவு செய்த நாள்
19
ஜூன்
2020
04:06
1895-ம் ஆண்டு மும்பை-சவுபாதி கடற்கரை மக்கள் பலர் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்க ஓர் அதிசயம் அரங்கேறியது. ஆம் நவீன யுகத்தின் முதல் விமானம் காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் 1500 அடி உயரத்தில் அநாயாசமாகப் பறந்தது. பின்னர் பாதுகாப்பாகத் தரையை தொட்டது. இந்த விமானத்தை அதன் வெள்ளோட்டத்தை கண்டு களித்த பலருள் முக்கியமான இருவர் பரோடா மன்னர் ஸ்ரீசாயாஜிராவ் கெய்க்வாடு மற்றும் நீதியரசர் மஹாதேவ கோவிந்த ரானடே. இந்த வானவூர்தியை வடிவமைத்து இயக்கியவர் சிவக்குமார் பாபுஜி தளபதே என்பவர். இவர் ஒரு வேத ஆராய்ச்சியாளர். ஒரு விஞ்ஞானி. கலைக்கல்லூரியின் ஆசிரியர். வேதங்களில் கூறப்பட்டுள்ள வானவூர்தி அமைப்பின் இலக்கணங்களை ஆழ்ந்து கற்று அதன்படி அவர் வடிவமைத்தது தான் இந்த நவீன உலகத்தின், முதல் ஆகாய விமானம் !...
இச்செய்தி புனேயிலிருந்து வெளிவரும் பாலகங்காதர திலகரின் பத்திரிகையான கேசரி எனும் நாளிதழில் வெளிவந்தது. ஆக, அண்மைக் கால வரலாற்றில் வானவியலுக்கு பாரதமே முன்னோடி, தளபதியேயின் இந்த விமானத்தின் பெயர் மாருதி சக்தி: இது பரத்வாஜ் மகரிஷியின் யந்திர ஸர்வஸ்வம் என்ற நூலில் வைமானிக சாஸ்திரா என்ற அத்தியாயத்தின் தொழில்நுட்பக் கொள்கைகளை ஆழ்ந்து கற்ற தளபதேயின் விஞ்ஞான அறிவால் வடிவமைக்கப்பட்டது. இது ஏன் தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளில் வரிசையில் இடம் பெறவில்லை? விடை எளிது... பிரிட்டீஷ் அரசு பரோடா மன்னரை மிரட்டி இந்த பெரும் மரமாக வளவிருந்த இந்திய ஆராய்ச்சியை முளையிலேயே கிள்ளியது. அதோடு, இந்த விமானத்தின் பாகங்களையும் செய்முறைக் குறிப்புகளையும் கைப்பற்றியது. என டெக்கான் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு 8 ஆண்டுகளுக்கு பிறகே 1903-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் நாள் ரைட் சகோதரர்களின் விமானம் ஆகாயத்தில் பறந்தது. முதல் விமானம் எனப்பிரச்சாரம் செய்யப்பட்டுக் கண்டுபிடிப்பாளர்களாக அவர்கள் புகழப்பட்டனர். இந்த விமான கண்டுபிடிப்பாளர்களுக்கு தளபதேயின் குறிப்புகள் அதாவது அந்த குறிப்புகளின் மூலமாக நம் தொன்மையான அறிவியல் ஞானம் உதவி இருக்கலாம் அல்லவா! இப்படி நமது வானவியல் விஞ்ஞான அறிவை நம்மை அறியாமலே வான் கடத்தல் -ஹைஜாக் செய்தவர்கள் நமது சரித்திரத்தின் கருப்புப் பகுதியான அடிமைக் காலக்கட்டத்தில் நம்மை ஆண்டவர்கள். எது எப்படியிருந்தாலும் நமது முன்னோர்களான மகரிஷிகளின் வானவியல் அறிவு இன்றைய உலக, அறவியில் வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த அரிய ஞானம் என்ன ஆயிற்று ? இது ஏன் ரகசியமாக வைக்கப்பட்டது? பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரத்தில் என்னென்ன செய்திகள் உள்ளன? நவீன விஞ்ஞானிகள் இது குறித்த ஆராய்ச்சிகள் ஏதேனும் செய்கிறார்களா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வானவூர்தி சங்கம், தேசிய வானவூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர்களும் மாணவர்களும் பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரத்தைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அவர்கள் அந்த நூலில் காணப்படும் முதிர்ந்த ஞானத்தைக் கண்டு வியக்கிறார்கள். ஆனால் அந்த நூல் பற்றிய அவர்களின் ஆய்வின் கண்டுபிடிப்புகளை வெளியிடவில்லை. போதானந்த பண்டிதர் வைமானிக சாஸ்திரம் பற்றி விளக்கங்களுடன் தமது கருத்துக்களையும் புத்தகமாக எழுதியுள்ளார். மைசூரைச் சேர்ந்த சுப்பராய சர்மா வைமானிக சாஸ்திரத்தின் அடிப்படையில் வானவியல் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார் இந்த நூல் ஆங்கிலத்தில் சார் ஆர்.எஸ். ஜோஸர், அவரால் வெளியிடப்பட்டது. இணைய தளத்தில் காணலாம். பரத்வாஜரின் விமான சாஸ்திரம் 8 முக்கிய தலைப்புகள், 100 உப தலைப்புகள், 500 சூத்திரங்கள், 3000 சுலோகங்கள் மற்றும் 32 வானவியல் ரகசியக் குறிப்புகள் அடங்கியவை. பல்வேறு விமான நூல்களிலிருந்து 1923 விமானங்கள் பற்றிய வரைபட விளக்கங்கள் காணப்படுகின்றன.
இந்நூலில் அந்த காலக்கட்டத்தில் இருந்த 25 விமான சாஸ்திரம் பற்றிய நூல்களிலிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டன என்பது ஆச்சரியமான செய்தி. அகஸ்தியரின் சக்தி சூத்ரம், ஈஸ்வர் என்ற வல்லூநர் எழுதிய சௌதாமினி கலா, சகாதாயனா என்பவர் எழுதிய வாயு தத்வ ப்ரசுரணா, நாரதரால் எழுதப்பட்ட வியஸானல தந்திரா, தூம ப்ரசுரணம், சௌனகர் எழுதிய வஸ்ராயானா தந்த்ரா, நாராயண மகரிஷி எழுதிய விமான சந்திரிகா, கர்கரால் எழுதப்பட்ட யந்த்ரகல்பா, வாசஸ்பதி எழுதிய யானபிந்து ஆகியவை தகவல் சேகரிப்புக்காக பயன்பட்டவை. பல யுகங்களில் இருந்த பல விதமான விமானங்கள், விமான ஓட்டிகளின் தகுதி, உடுப்பு சம்பந்தப்பட்ட விதிகள், விமானத்தில் பறக்கும் போது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள், விமானத்தின் பல தரப்பட்ட இயந்திர பாகங்கள், விமானங்களை செலுத்துவதற்கான எரிபொருள். விமானத்தின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தக்கூடிய உலோகம் மற்றும் அவற்றைப்பதப்படுத்தும் முறை, விமானத்தை ஆகாயத்தில் செலுத்தும் போது ஒரு விமானி எதிர்கொள்ள நேரிடும் சூழ்நிலைகள் மற்றும் அவற்றை வெற்றி கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய குறிப்புக்களை பெற பரத்வாஜர் மேற்கூறிய நூல்களை பயன்படுத்தினார்.
விமானம் என்பது நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய ஓர் ஊர்தி என நாராயண மகரிஷி கூறியுள்ளார். பரத்வாஜர் , விமானங்களை ஓட்டப் பயன்படுத்தக்கூடிய நான்குவித எரிபொருள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
1. வனஸ்பதி, 2. பாதரஸ வாயு, 3. சூரிய சக்தி, 4. காற்றிலிருந்து நேரடியாக சக்தியைப் பெறுவது, விமான சாஸ்திரம் என்ற இந்நூல் 31 வகையான எந்திரங்களைக் குறிப்பிடுகிறது. அவற்றில் சில,
1. விஷ்வ கிரியா தர்ப்பணம்:
இது காரின் பக்கவாட்டுக் கண்ணாடி போன்ற ஒன்று. வானவூர்தியின் 4 பக்கங்களிலும் உள்ளவற்றை இது விமான ஓட்டிக்கு காட்டும். பாதரசமும் மைகாவும் கொண்டு தயாரிக்கப்படுவது இது.
2. பரிவாஷ கிரியா எந்திரம்:
இது விமானம் தன்னைத்தானே செலுத்த உதவும் எந்திரம்.
3.தமோகர்ப்ப எந்திரம்: வான்வெளிப் போரில், வானவூர்தியில் இருந்து கொண்டு எதிரிக்குத் தெரியாமல் மறைந்து தாக்க விமானத்தை மறைக்கும் கருவி. தமோ கர்ப்பம் என்ற விசேஷக் கலப்பு உலோகம் இக்கருவி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
பிர்லா அறிவியல் மையம், ஹைதராபாத் மற்றும் மும்பை ஐ.ஐ.டி. ஆகியவற்றின் விஞ்ஞானிகள் பண்டைய விமான நூல்களில் குறிப்பிடப்பட்ட உலோகங்களை ஆராய்ந்து அவற்றின் பயன் மற்றும் பலவித விமானங்களில் கட்டுமானத்திற்குப் பயன்படும் கலப்பு உலோகங்களைத் தயாரிக்கும் தொழில் நுட்பங்களையும் கண்டறிந்துள்ளனர்.
விமானத்தை தரையிலிருந்து ஆகாயத்தில் செலுத்துவது, அந்தரத்தில் நிறுத்துவது, வானத்தில் குட்டிக்கரணங்கள் அடிப்பது, துரிதமாக வேகத்தை அதிகரிப்பது, குறைப்பது, எதிரிகளால் தாக்கப்படும் போது விமானத்தைப் பாதுகாப்பது போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பது போன்ற விமான ஓட்டிகளுக்கான 32 தொழில்நுட்ப திறமைகள் பற்றி வைமானிக சாஸ்திரம் பேசுகிறது.
ஒரு விமான ஒட்டி எதிர் கொள்ளும் ஐந்து விதமான வானிலை சூழ்நிலைகளைப்பற்றி சவுனக முனிவர் குறிப்பிட்டுள்ளார். தமது விமான சாஸ்திரத்தில் பரத்வாஜர் இவற்றை எடுத்து காட்டியுள்ளார்.
விமான வகைகள்: சத்ய மற்றும் திரேதா யுகத்தில் விமானங்கள் மாந்திரிக விமானங்கள் என அழைக்கப்பட்டன. மொத்தம் 25 வகைகள்: அவை மனிதர்களின் உடல் திறனாலும் அற்புத சித்திகளாலும் இயக்கப்பட்டன.
துவாபர யுகத்தில் விமானங்கள் 56 வகைகளை கொண்ட தாந்திரிக முறையிலானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன. கலியுகத்தில் விமானங்கள் கிரித்திக முறையிலானவை. இவை எந்திரங்களால் இயங்கக்கூடியவை. 25 வகையானவை. பண்டைய பாரதத்தில் ஆகாய விமானம் பற்றிய ஆராய்ச்சிமிகப் பழங்காலத்திலேயே இருந்தது என்பதை உணத்தும் தகவல்களில் சில: திரிசக்கர ரதம் என்னும் மூன்று சக்கரங்கள் கொண்ட காற்றில் செல்லக்கூடிய வாகனம் (4,36.1.) மற்றும் ஒரு வகை வாயுவின் சக்தியால் இயங்கக்கூடிய ஆகாய ஊர்தியைப் பற்றியும் (5.41.6) ரிக்வேதம் குறிப்பிடுகிறது. எரிபொருள் மூலம் செலுத்தப்படக்கூடிய ரதங்கள் பற்றிய குறிப்பும் உள்ளது. ( ரி.வே. 3.14.1).
புராணங்களும் விமானங்களைப் பற்றிய பல செய்திகளை தருகின்றன.
திரிபுரசூரர்கள் ஆகாயத்தில் பறக்கவும், நிலத்திலும் நீரிலும் செல்லக்கூடிய நகரங்களை நிர்மானித்திருந்தனர். ராமாயணத்தில் வால்மீகி முனிவர் விளக்கும் புஷ்ப விமானம் காற்றில் நகரும் ஒரு நகரமாக விளங்கியது. ராவணன் குபேரனிடமிருந்து இதை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
பாகவதத்தில் சிசுபாலனின் நண்பன் சால்வன், கிருஷ்ணன் மீது ஒரு வான்வழித் தாக்குதல் நடத்துகிறான். அவன் பயன்படுத்திய விண்வெளிக்கலம் ஸௌபா என்ற பெயர் கொண்டு இரும்பினால் செய்யப்பட்டு உறுதியாக விளங்கியது. அது மறைந்ததும் மீண்டும் தோன்றியும் மாயா ஜாலமாகத் தாக்கும் சக்தி உடையது: தன்னிடமிருந்து மேலும் பல விமானங்களை வெளிப்படுத்தும் சக்தி கொண்டது. உண்மையில் அது விமானமல்ல, ஓர் ஆகாய நகரம்!
கபில முனியின் பெற்றோர்கள் சுபர்தா முனிவரும் அவரது மனைவி தேவஹுதியும் விமானத்தில் நசஷத்திரங்களுக்கிடையே பயணித்ததாக ஒரு குறிப்பும் பாகவதத்தில் வருகிறது.
கவுடில்யர் நிர்வாகக் கொள்கைளைப்பற்றிக் கூறும் நிர்வாகக் கொள்கைகளைப் பற்றிக் கூறும் தமது அர்த்த சாஸ்திரத்தில், விமான ஓட்டிகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் அரசு அளிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார். விமான ஓட்டிகளை ஸௌபிகாஸ் என்றும் வான்வெளிப் போரில் ஈடுபடுபவர்களை ஆகாசயோத்தா என்றும் கவுடில்யர் அழைக்கிறார்.
நமது நவீன விமானங்கள் சூடான வாயுக்களை எரிப்பதன் மூலம் செலுத்தப்படுகின்றன. உண்மையில் நாஸாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் , விமான சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதரசத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்திகளைப் பற்றி ஆராய்ந்துள்ளனர். இதன் விளைவாக பாதரசப் வோர்டெக்ஸ் இயந்திரங்களை வடிவமைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.
போஜ அரசர் எழுதிய சமரங்கன சூத்ரதாரா என்ற நூலில் தரப்பட்டுள்ள நுணுக்கங்களைப் பின்பற்றி இந்த இயந்திரத்தை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய வானவியல் பற்றிய பல செய்திகள் சதபத பிராமணம், ஹரிவம்சம், மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம், உத்தர ராமசரிதம், ஹர்சசரிதம், விக்கிரமோர்வசீயம், சீவக சிந்தாமணி (தமிழ்) போன்றவற்றில் கிடைக்கின்றனர்.
நவீன கண்டுபிடிப்புகள்: ராடார் மூலம் கண்டுபிடிக்க முடியாத ஒரு வகைப் பெருளை நவீன விஞ்ஞான, வாரணாசி இந்து பல்கலைக் கழகப் பேராசிரியர் டோங்க்ரே தம் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆராய்ச்சி பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது.
அண்மையில் சீன அரசு, திபெத் பகுதிகளில் கிடைத்த சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளை, சண்டிகர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ருத்ரேனாவிடம் கொடுத்து அவற்றில் எழுதியிருப்பதைக் கண்டறிந்து சொல்லும்படி கோரியுள்ளது.
ருத்ரேனா, இந்த கையெழுத்துப் பிரதிகள் நட்சத்திரங்களுக்கு ஊடேயான பயணம் மற்றும் ஈர்ப்பு விசையின் அடிப்படையிலான வான்வழிப் பயணங்கள் பற்றிய பல செய்திகளை உள்ளடக்கியுள்ளன என்று கூறுகிறார்.
மேலும் அவர் இத்தகைய அற்புத சாஸ்திரங்கள் எனப்படும் எந்திரங்களின் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் மனிதர்களை வேற்று கிரகங்களுக்கு அனுப்பியிருக்கக் கூடும் என்கிறார்.
வானவியிலில் உன்னத நிலையை வேதகாலத்திலேயே இந்தியா அடைந்திருந்தது என்பதை இவை உறுதி செய்கின்றன.