Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முன்னோர்களின் விமான ஆராய்ச்சி! கல்லணை ஆஞ்சநேயர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனித குலத்தை நேசித்த ரிஷிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2020
04:06

இறைவனே இயற்கையாக நிற்கும் வானளாவிய விருக்ஷங்கள் கொண்டது நைமிசாரண்யம். அங்கே தவாக்னியில் ஜொலிக்கும் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் உள்ளது. நதிக்கரையில் பல ஆசிரமங்கள், அவை பரத்வாஜரின் சீடர்கள் பயிலும் வித்யாலயங்கள், ஒரு குடிலின் வாசலில் சீடர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். நம் குருநாதரின் ஆன்மா, லோகத்திலுள்ள மக்களின் நன்மைக்காகத் தவிக்கிறது. சகோதரர்களே, குருநாதர் தியானிப்பதில் ஒரு முக்கிய செய்தி உள்ளது என்றார் பவுத்ததமர் என்ற சீடர் ஓலைச்சுவடிகளைக் கோர்த்தபடி. ஹோமத்திற்கான சமித்துக்களை அடுக்கியபடி, சகோதரரே அது என்ன? என்றார் தர்க்கருசி. தர்க்கருசி, பிரம்மமே இந்தப் பிரபஞ்சமாக மாறியுள்ளது. பிரம்மத்தின் சிறுசிறு அம்சங்களாக சம்சாரத்தில் ஜீவர்கள் உள்ளார்கள். அந்த ஜீவர்களை நெறிப்படுத்தினால் அவர்களும் மேம்பாடு அடைவார்கள்.

ஆமாம், இது நம் குருதேவர் கூறுவதுதானே! பாவாதீதா, இதை வாசித்தால் மட்டும் போதுமா? அதை உணர்ந்து முழு சத்தியத்தை அனுபவிக்க அந்த ஜீவர்களை உயர்த்த வேண்டும். பிரிய சகோதரரே, ஜீவர்களை உயர்த்துவதற்கு நம் பரத்வாஜ மாமுனி என்ன செய்து வருகிறார் என்று எங்களுக்கு விளக்குங்கள் என்றார் பிருகு. பிருகு, இருப்பதெல்லாம் இந்த பூமண்டலமே என ஜீவர்கள் நினைத்து மயங்காமல், இதைவிட சிரேஷ்டமான மண்டலங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதைக் காட்டும் வைமானிக சாஸ்திரத்தையும் நம் குருதேவர் படைத்துள்ளார். அது விமானங்களைப் பற்றி ஆராயும் சாஸ்திரமா சகோதரரே?  ஆம் சவும்யா, போக்குவரத்துக்காக மட்டும் பயன்படும் விமானமல்ல, அது . நாடு விட்டு நாடு, ஒரு கோள் விட்டு  மற்றொரு கோளுக்குச் செல்லும்  விமானங்களை குருதேவர்  வடிவமைத்துள்ளார். அந்த விமானம் உடையாது; தீயால் எரிந்து போகாது; எரிபொருள் தீர்ந்துவிட்டால் சூரியக் கதிர்களாலும் பறக்கும் என்றார் பவுத்ததமர் பெருமையாக..

அப்படியா! என்று சீடர்கள் வியந்தனர்.  நதிக்கரையில்  தியானித்துக்கொண்டிருந்த பரத்வாஜர் மெல்லக் கண்களை திறந்தார். மந்த்ரத்ரஷ்டாவான பரத்வாஜர் தியான நிலையிலேயே மந்திரங்களைப் பிரவாகமாக மொழிந்தார். அவர் செப்பிய வேகத்திற்கு வித்யாபதி என்ற சீடர் அவர் கூறியதை எழுதிக் கொண்டார். பரத்வாஜரின் இந்த ஆசிரமத்தில் ஓராயிரம் சீடர்கள், ஒரு விமானத்திலிருந்தபடியே வேறு நாட்டு விமானத்தில் நடப்பதை காணவும் கேட்கவும் உதவும் உபகரணங்களைப் பற்றிய ஆயுத சாஸ்திரத்தையும் கற்று வருகிறார்கள். அடுத்த  ஆசிரமத்தில் ஓராயிரம் பேர் தர்ம சாஸ்திரமும், மற்றொரு ஆயிரம் சீடர்கள் அர்த்த சாஸ்திரமும் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். பிரம்மரிஷி பரத்வாஜர் எல்லா ஆராய்ச்சிகளையும் வழி நடத்தும் மஹாச்சார்யராக விளங்குகிறார். அக்கரையில் பல முனிவர்களின் குடில்கள், அங்கு மஹரிஷிகளின் சமாஜத்தின் தலைவர்  குடிலில் ஓர் உயர்ந்த ஆசனத்தில், சீடர்களுடன் அமர்ந்திருத்தார். அவரது எதிரே வேள்வியை முடித்திருந்த யாக குண்டம். மனதை மேம்படுத்தும் யாகப்புகை இன்னும் அடங்கவில்லை.

ஆறேழு முனிவர்கள் நமது பிரிய சீடரான பரத்வாஜரைப் பற்றி பேச வந்திருப்பதை எண்ணி மகிழ்ந்த தலைமை முனிவர், பிரம்மதிஷ்டர்களே, எதைத் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து கொள்ள முடியுமோ, அதைத் தெரிந்து கொண்டவராக நம் பரத்வாஜர் விளங்குவது நமது சமாஜத்திற்கே கவுரவம்.... என்றார் அகம் மலர. வந்திருந்த முனிவர்கள் அவரது மகிழ்ச்சியில் பங்கு கொண்டனர். பிறகு மெல்ல, ஹே பிரம்ம வித்தமரே, நாங்கள் வந்திருப்பது பரத்வாஜ மகரிஷியின் விராட் ஆய்வு பற்றி உங்களிடம் பேசத்தான் என்றார் ஒருவர். ஏன் பெருமக்களே, நம் மகரிஷி பல அரிய கருவிகளையும் பல்வேறு புதிய துறைகளில் சிந்தித்துப் பல விஞ்ஞான உண்மைகளையும் தரிசித்து வருகிறாரே, அவø மக்களுக்கு பயனுடையவையாக உள்ளனவே...? முனிவர்களுள் ஒருவர், பிரம்மசிரேஷ்டரே, புலன்களுக்கான வசதியான விமான சாஸ்திரமும் இன்னும் பல விஞ்ஞான வித்யைகளும் நம் பரத்வாஜரின் மாபெரும் பங்களிப்புகள் தான்.... என்பதற்குள், அடுத்த ரிஷி,

நிச்சயமாக, அவரது அந்த மேதாவிலாசத்திற்கும், ஆன்ம முதிர்ச்சிக்கும் தக்கபடி, அவருக்கு இளம் வயதிலேயே  10,000 வித்யார்த்திகளும் சீடர்களும் உள்ளார்கள் என்றார் வேகமாக. முனிவர்களுள்  பெரியவரான ஒருவர், குருவே அடியேனை மன்னியுங்கள், பரத்வாஜர் அபாயகரமான போர் ஆயுதங்கள் பற்றியும் ஆராய்ந்து  வருகிறார்.  நம் நாட்டைக் காக்க அது இன்று அவசியமாகத் தோன்றலாம்; ஆனால் உலகைக் காக்கும்  பொறுப்பும், ஆன்மிகவாதிகளான நமக்கு உள்ளதல்லவா? அதையும் நாம் யோசிக்க வேண்டும் என்றார். அடுத்த முனிவர், பக்குவப்படாத மன்னரின் கையிலோ, சுயநலமான வியாபாரிகளிடமோ அந்த ஆயுதங்கள் சென்று சேர்ந்தால், ஆயுத வியாபாரமே பெரிய தொழிலாகிவிடுமே?.. என்று கேட்டார்.

அதுவரை வீசி வந்த தென்றல் சற்று நின்றது. ஆச்சார்யரே, வெகு தூரத்திலுள்ள நபருடன் தொடர்பு கொள்ளலாம், அங்கு நடப்பதை இங்கிருந்து பார்க்கலாம். இவை யாவும் பரத்வாஜரின் தியான சித்தியால் விளைந்தவை, ஆனால்..., என ஒரு முனிவர் கூறுவதற்குள் அடுத்தவர், மகோத்தமரே, இவை போன்ற  விஞ்ஞானக் கருவிகள் மனிதனுக்குச் சுகத்தைத்  தரலாம். இந்தச் சுகங்கள் மனிதனை வசதியான வாழ்வுக்கு இட்டுச் செல்லலாம். ஆனால், அவனது பாரமார்த்திகச் சிந்தனைக்கு நிச்சயம் பங்கம் விளைவிக்கும். இவ்வுலக இன்பங்களே போதும், பரலோக பிராப்தி வேண்டாத ஒன்றாகிவிடும். தெய்விகத்திலிருந்து மனிதனின் கவனம் திசை திரும்பி அவன் பசு நிலையிலேயே உழல்வானே...? என்றார்.  எல்லாவற்றையும் கேட்ட தலைமை முனிவர் மெல்லக் கண் மூடினார்.  நடப்பதையும் நடக்க இருப்பதையும் தம் நெஞ்சத்து அறிவால் கண்டார்.

பிறகு அவர், முனிவர்களே, நீங்கள் உரைத்ததெல்லாம் உண்மையாகிவிடும் போல் தெரிகிறது. இருந்தாலும் பரத்வாஜரின் ஆராய்ச்சி அரிதானதாயிற்றே...? என்றார் மெல்ல. ஆம் தபோநிஷ்டரே, அது அரிதானதுதான், ஆனால் அந்த ஆராய்ச்சியின் விளைவுகள் எதிர்காலத்தில் குருட்டு அறிவிலிக்கும், வறட்டு வேதாந்திக்கும் போய் சேர்ந்தால், அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா? திரும்பத் திரும்ப இந்திரிய வசதிகளையும், சுகங்களையும் அனுபவித்து அனுபவித்து ஜனங்கள்  ஜனன மரண சுழற்சியிலேயே தேங்கி விடுவார்களே ?
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற கிரமத்தை மறந்து, நடு இரண்டில் மட்டும் நின்று விட்டால், அது மனிதகுலத்திற்கு மஹதி நஷ்டம் என்று அந்த முனிவர் ஆத்மார்த்தமாக உரைத்தார். பிறகு கைகூப்பியவாறு தலைமை மகரிஷியிடம், ஹே பிரம்மவித்தமரே, பிரம்மஸ்ரீ பரத்வாஜர் யாத்த மந்திர மகார்ணவம், என்ற மந்திரபரமான கிராந்தம் கூறும் ஆராய்ச்சிகளின் விளைவுகள் மக்களைச் சென்றடையக்கூடாது; அது போன்ற ஆய்வின்  பலன்களால்  உருவாகும் உபகரணங்களைப் படைக்க நம் மாமன்னர் நிதியுதவி வழங்காமல் இருக்க வேண்டும். இது எங்களது விண்ணப்பம் என்று கூறி குருதேவரை வீழ்ந்து வணங்கினார்.  மனித குலத்தின் மீதான முனிவர்களின் பொறுப்பான சிந்தனையைக் கண்டு குடிலில் கிளிகளும், குரலெழுப்பி ஆர்ப்பரித்தன; ஆமோதித்தன. சற்று நேரத்திற்குப் பிறகு தலைமை மகரிஷி தொண்டையைக்  கனைத்தபடி, பெரு மக்களே, மக்களின் ஆன்ம முன்னேற்றத்தின் மீது உங்களுக்குள்ள மெய்யான பொறுப்பைக் காட்டினீர்கள்  இது போன்ற  ஆராய்ச்சிகள் தொடரட்டும்; ஆனால் லௌகீகத்திலேயே மனிதனைப் பிடித்து வைக்கும் அந்த ஆராய்ச்சிகளினால், எதிர்காலத்தில் வரக்கூடிய கொடுமையான பலன்கள் ஜனங்களைத் தொடராமலேயே இருக்கட்டும் என்றார்.

ஆம் குருவே, நமது மாமன்னரின் செவிகளுக்குத் தாங்களே இதைச் சேர்க்க வேண்டும். ஆகட்டும். ஆனால் தசரதர் மறைந்து, ராமர் வனம் ஏகி, அவரைத் தேடி பரதனும் நம் கானகத்தின் பக்கமாக வருகிறாராம் என்றார் அவர். ஆமாம் குருவே, இன்று இரவு பரதர் தமது பரிவாரங்களுடன்  வனத்தில்  தங்கிவிட்டு நாளை சித்ரகூடத்திற்குச் செல்வதாக  அறிகிறோம். நல்லது. இறைவனின் திருவருளால் இன்றிரவே பரதனைச் சந்தித்து, உங்கள் கருத்துக்களைக் கூறி வாருங்கள், முனிவர்கள் விடைபெற்றனர். என்ன முனிவர்கள் என்னை வந்து சந்திப்பதா! கூடாது. நானே அங்கு செல்கிறேன் என்றார். ராமரஹிதமான பரதர் பெரும் சோகத்தின் நடுவிலும். இரவு. தியானம் செய்யும் சித்தர்களால் கானகம் வானகமானது. முனிவர்களின் குடிலுக்கு விரைந்த பரதர், அவர்களது பாதம் பணிந்தார். தமக்கு ராமரின் அருள் கிடைக்க வேண்டும் என அவர்களிடம் வேண்டினார். முனிவர்கள் பரதனது சகோதர பாசத்தை மெச்சினார்கள். முடிவில் ரிஷிகள் தாங்கள் பரதரிடம் பேச வேண்டியதைப் பேசினர்.

பரதரோ, பூஜனீயர்களே, மகரிஷியிடம் இது பற்றிப் பேச எனக்குத் தகுதியில்லை, மேலும் வேறு எதுவும் பேசும் மனநிலையிலும் அடியேன் இப்போதில்லை; ராமச்சந்திர பிரபு கானகத்திலிருந்து இன்னும் ஓரிரு நாட்களில்  நிச்சயம் அடியேனோடு நாடு திரும்புவார். அப்போது அவரே பரத்வாஜ மகரிஷியிடம் இது பற்றி  கூற முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

பரதருடன் வந்திருந்த வசிஷ்ட மகரிஷியும், ரிஷிகளே , உங்களது உயர்ந்த எண்ணம் நிச்சயம் ஈடேறும். ஓர் அரசன் தன் நாட்டு மக்களுக்கு அறிவும் பாதுகாப்பும், நம்பிக்கையும் வழங்க வேண்டும்.  மக்களுக்கு உழைப்பு தர வேண்டும். எதையும் இலவசமாகத் தரக்கூடாது; அதிக வசதிகளை மட்டும் தந்து அவர்களது சிந்தனா சக்தியையும், உழைப்பையும் வீரியத்தையும் வீணடிக்கக்கூடிய எதற்கும் அவன் உதவக் கூடாது. மக்களுக்கு வேண்டியது சாந்த சவுக்கியமே, அசாந்த சவுகரியம் கூடவே கூடாது என்றார். பரதர் புறப்பட்டார்.

விடிந்தது: முந்தைய இரவு முனிவர்கள், தமது ஆராய்ச்சி குறித்து உரையாடியது பரத்வாஜரின் தியானத்தில் அப்படியே காட்சியாக மலர்ந்தது.

தாம் ஆராயும் விஞ்ஞான, மெய்ஞ்ஞான சிந்தனைகளை மற்ற ரிஷிகள் வேறு கோணத்திலிருந்து எவ்வாறு காண்கிறார்கள் என்பதை அறிந்த பரத்வாஜருக்கு வருத்தம் மேலிட்டது.

மனிதகுல மேம்பாட்டுக்காகப் பொறுப்பாகச் சிந்திக்கும் அந்த மகரிஷிகள் கூறுவதும், சத்தியம் தானே என்று நீண்ட நேரம் சிந்தித்தார்.

பரத்வாஜர் தமது பாவனா சக்தி மூலம், தமது காலத்திலிருந்து வருங்காலத்தில்  எவ்வளவு அதிகமாக  ஆழ்ந்த கவனத்தைச் செலுத்த முடியுமோ, அந்த அளவிற்கு செலுத்தினார், வருங்காலத்தில், பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் நடக்கப்போவதை திரிகால ஞான திருஷ்டியில் கண்டார்.

காலச் சக்கரம வேக வே....க....மா...க....ச்...சற்றி நேராகப் பரபரப்பான கலியுகத்தில் வந்து நின்றது.

கலிகால மனிதன் ஓரிடத்தில் ஒரு சிறு கருவியைக் கையில் ஏந்திக் கொண்டே ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பவரிடம் பேசுகிறான்; சுற்றிலும் நடப்பதை மறந்து பேசிக் கொண்டும் காதால் கேட்டுக் கொண்டேயும் இருக்கிறான்.

தூர தேசத்திலிருந்தபடி இங்கு நடப்பதை அவன் ஒரு பெட்டி முன்பு அமர்ந்து வண்ணக் காட்சிகளாகப் பார்க்கிறான், பிறகு அது பற்றியே மேன்மேலும்  ஆர்வமாகப் பேசிக் கொண்டிருக்கிறான்.

இளைஞர்கள் பேசும் கருவி, கேட்கும் கருவி, பார்க்கும் பெட்டி... அவ்வளவு ஏன் விளையாடக்கூட வெளியில் செல்லாமல், ஒரு கருவி முன்பு மணிக்கணக்காக விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள் என்று எல்லோரும் படுசோம்பலாக இருந்தனர்.

ஒருவரை ஓருவர் பார்த்துக் கொள்வதும், அன்போடு பேசிக்கெள்வதும் குறைந்து அன்பற்ற அல்ப  ஆத்மாக்களாக மாறி வந்தனர்.

அங்கு செய்திகள் குவிந்தன; சிந்தனைகள் சிதைந்தன, அன்பு தேய்ந்தது; வறட்டு அறிவு, ஆட்டம் போட்டது அட்டகாசமாக.

கலிகால மனிதனை பரத்வாஜர் தமது ஞான திருஷ்டியால் மேலும் கூர்ந்து நோக்கினார்.

ஒரு பொத்தானை அழுத்தினால் விமானம் புறப்பட்டது. பரத்வாஜர் மகிழந்தார்.  

மறு பொத்தானை அழுத்தினால் வெகு தூரத்துக் காட்சிகளை மனிதன் பார்த்து ரசித்தான்; கேட்டு அனுபவித்தான்; பேசி வம்பளந்தான். அப்போதும் அவர் மக்களின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தார்.

ஆனால் ...., சட்டென்று பரத்வாஜரின் தியானத்தில் ஒரு  காட்சி பரபரப்பாக விரிந்தது. ஒரே ஒரு பொத்தானைத் தட்டியதும், எட்டே நிமிடத்தில் பூலோகமுமே பஸ்பமானது!!!

ஓ! ஐயோ இது நடந்துவிட்டால்......,

பரத்வாஜர்: திடுக்கிட்டு எழுந்தார். அவர் சிந்தித்தார். மந்திரங்களைப் பற்றியல்ல; முதிராத மனித மனங்களைப் பற்றி!

பிற்காலச் சந்ததியினரின் அசுர வேக அறிவு முதிர்ச்சியைப் பற்றியல்ல; வளர்ச்சியைப் பற்றி!

இவை போன்ற நமது ஆராய்ச்சிகளால் எதிர்காலத்தில் சாத்தியமாக்கக்கூடிய விளைவுகள் நன்மைகள் மக்களுக்கு போய்த்தான் சேர வேண்டுமா? என்று ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.

திடீரென அவருக்குள் இருந்த ஆராயும் திறன் ஒரு கேள்வி கேட்டது:

பரத்வாஜரே, நீங்கள் கண்டுபிடிக்காவிட்டாலும் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கான  கரு ஏற்கனவே பாவ பிரபஞ்சத்தில்  வெளிப்பட்டுவிட்டதே....?

அதற்கு பரத்வாஜர், அந்த விஞ்ஞான கருக்கள் யாவும்  பாவ பிரபஞ்சத்திலேயே இருக்கட்டும். பிற்கால மனிதன் யார் வேண்டுமானாலும் அதைக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும், ஆனால் கலியுகத்தில் வரப்போகிற பெரும் கொடுமைகளை அதற்கு முன் யுகங்களிலேயே வெகு சீக்கிரம் கொண்டு வருவதற்கு என்னால் முடியாது என்றார்..

மேலும் பரத்வாஜர், எங்களது கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளெல்லாம் மனத்தூய்மை அடைந்த மெய்ஞானிகளால் படைக்கப்பட்டவை;

எதிர்கால மனிதனோ, மனதைப் பண்படுத்தாமல் வெறும் எந்திரங்களையும் தகவல்கள் மீதான அறிவையும் வைத்துக் கொண்டே விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் காணக்கூடியவன்.

ஆதலால், மனிதன் முதலில் தன்னை ஆன்மாவில் ஸ்திரப்படுத்திக் கொள்ளட்டும்; பிறகு, இவை போன்ற ஆராய்ச்சியின் பலன்கள் அவனை அடையட்டும்; அதற்கு முன் அவை அவனுக்குப் போய்ச் சேர்ந்தால், அவன் தனது அழிவைத் தானே தீவிரமாகத்  தேடிக் கொள்வான். அதனால் அவை அவனுக்கு வேண்டாம். அவை ரகசியமாகவே இருக்கட்டும். இவ்வாறு முடிவெடுத்த பரத்வாஜர் தமது ஆசனத்திலிருந்து எழுந்து ஆச்சார்யரின் குடிலை நோக்கி நடந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar