பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத மாணிக்க நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சிவகாமசுந்தரி சமேத மாணிக்க நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வது வழக்கம். சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முதலாவது சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் இளநீர், சந்தனம், விபூதி, குங்குமம், தேன் உள்ளிட்டவற்றை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11 முறை ருத்ரம் பாராயணம் செய்து, இரவு 9 மணிக்கு மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.