பதிவு செய்த நாள்
26
ஜூன்
2020
10:06
ஈரோடு: ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் தங்கக்கவச கொடிமரம் வைப்பதற்கான பூஜை நேற்று நடந்தது.
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் கடந்த மாதம், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை கமிஷனர் செந்தில்வேலவன் ஆய்வு செய்தார். அப்போது, இரு கோவில்களில் உள்ள பழுதடைந்த கொடிமரங்களை, மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், 33 அடி உயரம் தங்கக்கவச கொடிமரம், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், 21 லட்சம் ரூபாய் மதிப்பில் 28 அடி உயரம் கொண்ட தங்கக்கவச கொடிமரம் நிறுவப்படுகிறது. அதற்கான தேக்கு மரங்கள், கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. கொடி மரம் உருவாக்குவதற்கான பூஜை, நேற்று கோவிலில் நடந்தது. கோவில் பட்டாச்சாரியார்கள், புதிய மரத்துக்கு மஞ்சள் பூசி, மாலை சாற்றி சிறப்பு பூஜை செய்தனர். பின்னர், கோவில் பசு மாடுகள் கன்றுகளுடன் மரத்தை வலம் வந்தன. செயல்அலுவலர் கங்காதரன் மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.