திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரசாத கடை, 11 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு உண்டியல் வருமானம் மட்டுமின்றி, முடி காணிக்கை, நிலங்கள் குத்தகை மற்றும் கோவில் பிரசாத கடை மூலம் வருவாய் கிடைக்கிறது. நேற்று முன்தினம், காஞ்சிபுரம் அறநிலையத் துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில், கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில், கோவில் வளாகத்தில் பிரசாத கடை நடத்த ஏலம் விடப்பட்டது. இதில், திருச்சி கொடுமுடியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஓராண்டு காலத்திற்கு பிரசாத கடை நடத்த, 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு, 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்தாண்டு, இரண்டரை லட்ச ரூபாய் கூடுதலாக ஏலம் விடப்பட்டுள்ளது.