பதிவு செய்த நாள்
14
மே
2012
10:05
ராசிபுரம்: எல்லை மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, மே 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ராசிபுரம்-புதுப்பாளையம் சாலையில், எல்லை மாரியம்மன் மற்றும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி மாதம் பொங்கல் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, மே14ம் தேதி, கிராம சாந்தியுடன் துவங்குகிறது. மே 15ம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி ஊர்வலம், இரவு 8 மணிக்கு பூந்தட்டுகள் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் ஊர்வலமாக செல்கின்றனர். இரவு 10 மணிக்கு காப்புகட்டி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.மே 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதியம் 2 மணி மற்றும் இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மே 21ம் தேதி இரவு 10 மணிக்கு பூவோடு பற்ற வைத்தலும், மே 22ம் தேதி காலை 7 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.மே 23ம் தேதி காலை 7 மணிக்கு சக்தி அழைப்பு, 11 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு அக்னி குண்டம் பற்றவைக்கப்படுகிறது. மே 24ம் தேதி காலை 6 மணிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆண்,பெண் பக்தர்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கி, அம்மனுக்கு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். காலை 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மே 25ம் தேதி மதியம் 2 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா வந்து சத்தாபரண நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக் குழு உள்பட பல்வேறு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.